மக்கள் இயக்கம் அதிமுக; அதன் வலிமையை நிரூபித்துள்ளோம்: முதல்வர் பழனிசாமி பெருமிதம் 

மக்கள் இயக்கம் அதிமுக; அதன் வலிமையை நிரூபித்துள்ளோம்: முதல்வர் பழனிசாமி பெருமிதம் 
Updated on
1 min read

தருமபுரி

அதிமுக ஒரு மக்கள் இயக்கம் என நிரூபித்துள்ளது. அதிமுகவின் வலிமையை மக்கள் மன்றத்தில் நாம் நிரூபித்துள்ளோம் என்று முதல்வர் பழனிசாமி பேசினார்.

உயர் கல்வித்துறை அமைச்சரும் தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளருமான கே.பி.அன்பழகனின் இளைய மகன் சசிமோகன், சென்னையைச் சேர்ந்த மனோகரன் என்பவரின் மகள் பூர்ணிமா ஆகியோரின் திருமணம் கடந்த மாதம் திருப்பதியில் நடைபெற்றது.

இந்நிலையில் சசிமோகன் - பூர்ணிமா ஆகியோரது திருமண வரவேற்பு விழா தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம் கெரகோடஅள்ளி கிராமத்தில் தானப்ப கவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக முதல்வர் பழனிசாமி கலந்துகொண்டு மணமக்களுக்கு மலர்க்கொத்து வழங்கி வாழ்த்தினார்.

அப்போது முதல்வர் பழனிசாமி பேசும்போது, ''சசிமோகன் - பூர்ணிமா ஆகியோரது திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை மனதார வாழ்த்தியதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மணமக்கள் நீண்ட ஆயுளையும், நீண்ட வாழ்வையும் பெறவேண்டுமென வாழ்த்துகிறேன்.

சிறந்த நிர்வாகம் காரணமாக இந்தியாவிலேயே உயர்கல்வி பயிலும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழக மாணவர்களில் 49 சதவீதத்தினர் உயர்கல்வி படிக்கின்றனர். இது, உயர்கல்வியில் ஒரு சகாப்தம். தமிழகத்தில் வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

தருமபுரி அதிமுவின் கோட்டை என்பதை தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் சட்டப் பேரவை இடைத்தேர்தலின்போது அமைச்சர் கே.பி.அன்பழகன் நிரூபித்தார். கட்சியினரையும், கூட்டணிக் கட்சியினரையும் ஒருங்கிணைத்துப் பணியாற்றி வெற்றியை அளித்ததற்கு அவருக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அண்மையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை இடைத் தேர்தல்களிலும் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இது ஒரு மக்கள் இயக்கம் என நிரூபித்துள்ளது. அதிமுகவின் வலிமையை மக்கள் மன்றத்தில் நாம் நிரூபித்துள்ளோம்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in