Published : 10 Nov 2019 05:15 PM
Last Updated : 10 Nov 2019 05:15 PM

புகழேந்தி தலைமையில் அமமுக அதிருப்தியாளர்கள் அதிமுகவில் இணைய முடிவு; 3 தீர்மானங்கள் நிறைவேற்றம் 

சேலம்

அமமுக அதிருப்தியாளர்கள் முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைய முடிவெடுத்துள்ளனர். இது தொடர்பாக புகழேந்தி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமமுகவின் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் புகழேந்தி. அவருக்கும் அமமுக பொதுச் செயலாளர் தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு புகழேந்தி, தினகரனை வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கினார். இதனால் இருவருக்கும் இடையே விரிசல் அதிகமானது.

இந்நிலையில் கடந்த வாரம் தமிழக முதல்வர் பழனிசாமியை புகழேந்தி திடீரென சந்தித்தார். அப்போது இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக முதல்வரைச் சந்தித்ததாகத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து புகழேந்தி விரைவில் அதிமுகவில் இணைவார் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில் போட்டி அமமுகவின் சேலம் மண்டல நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் புகழேந்தி தலைமையில் சேலத்தில் இன்று நடைபெற்றது. இதில் முக்கிய மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மூன்று தீர்மானங்கள்

* விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றதை ஒட்டி முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

* அமமுகவில் முக்கிய நிர்வாகிகள் விலகியுள்ளதால் அமமுகவுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிற எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அமமுக அதிருப்தியாளர்கள் அனைவரும் அதிமுகவில் இணைவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x