

பொள்ளாச்சி
அர்த்தனாரி பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் (60) என்பவரை காட்டு யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் திரும்மாத்தாள் என்ற மூதாட்டியை யானை தூக்கி வீசியதில் அவர் படுகாயமடைந்தார்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் நவ மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு காட்டு யானை மலைவாழ் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. மலைவாழ் மக்களில் குடியிருப்பைச் சேர்ந்த மாகாளி என்ற முதியவரையும் 6 வயது சிறுமி ஒருவரையும் தாக்கிக் கொன்றது. இதையடுத்து வனத்துறையினர் டாப் சிலிப் பகுதியில் இருந்து கும்கி யானைகளைக் கொண்டு வந்து காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக காட்டு யானை மீண்டும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அர்த்தனாரி பாளையம் கிராமத்தில் விவசாயத் தோட்டங்களுக்குள் புகுந்து தென்னை வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வந்தது. நேற்று இரவு அர்த்தனாரி பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் (60) என்பவரைத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் யானை வனத்துறையினருக்கு போக்கு காட்டியது. இன்று அதிகாலை அதே பகுதியில் தோட்டத்துக்கு பால் கறக்கச் சென்ற திரும்மாத்தாள் (55) என்ற மூதாட்டியை காட்டு யானை துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த மூதாட்டியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு வனத்துறையினர் அனுப்பிவைத்தனர். திரும்மாத்தாளுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காட்டு யானையைப் பிடித்து கூண்டில் அடைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து வனத் துறையினர் கோவை சாடிவயல் பகுதியிலிருந்தும் லாரியை வரவழைத்து டாப் சிலிப் கோழிகுத்தி முகாமிலிருந்து கலீம், மாரியப்பன் மற்றும் சுயம்பு ஆகிய மூன்று கும்கி யானைகளை வரவழைக்கத் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் கால்நடை மருத்துவர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டு இரண்டு மூன்று தினங்களுக்குள் அந்த காட்டு யானையைப் பிடித்து வரகளியாறு முகாமில் கூண்டில் அடைக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.