

சென்னை
திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் தொடங்கியது. திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், 3000க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
திமுக பொதுக்குழு கூட்டம் கடந்த செப்.6-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்கள் காரணமாக, பொதுக்குழு கூட்டம் நவம்பர் 10-ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, காலை 10 மணியளவில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் உள்ள அரங்கத்தில் திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், 3,000க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். திமுக பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, ஐ.பெரியசாமி, கனிமொழி ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.
அழைப்புக் கடிதம் உள்ளவர்களுக்கு மட்டுமே பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொதுக்குழு மேடையில் வைக்கப்பட்ட அண்ணா, கருணாநிதி படங்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அண்மையில் மறைந்த திமுக உறுப்பினர்கள், பேனர் விபத்தில் பலியான சுபஸ்ரீ, ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து பலியான சுஜித் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், திமுகவின் ஆக்கப்பணிகள், உள்ளாட்சித் தேர்தல், கழகச் சட்டதிட்ட திருத்தம், தணிக்கைக்குழு அறிக்கை ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.