

சென்னை
ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்ட திருப்பூர் சிறுவனின் இதய ரத்தக் குழாயில் இருந்த கட்டியை சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றினர்.
திருப்பூர் மாவட்டம் பழைய கோட்டையை சேர்ந்தவர் மணி. இவரது மகன் கவுரிசங்கர் (16). கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சிறுவன் கவுரிசங்கரை சிகிச் சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், இதயத்தின் முக்கிய ரத்தக் குழாயான மகாதமனி வீங்கி வெடிக்கும் நிலையில் இருந்தது. இதையடுத்து, சிறுவனுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
மருத்துவமனை டீன் ஜெயந்தியின் ஆலோசனைப்படி, ரத்தநாள அறுவை சிகிச்சை துறை தலைவர் என்.ஸ்ரீதரன் தலைமையில் இதய அறுவை சிகிச்சை துறை தலைவர் ஜோசப் ராஜ், மயக்க டாக்டர்கள் அனுராதா, பவானி ஆகியோர் கொண்ட குழுவினர் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்தனர். மகாதமனியின் வீங்கி இருந்த பகுதியை மட்டும் அகற்றிவிட்டு, அந்த இடத்தில் செயற்கையான ரத்தக் குழாயை வெற்றிகரமாக பொருத்தினர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிறுவன் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.
இதுதொடர்பாக ரத்தநாள அறுவை சிகிச்சை துறை தலைவர் என்.ஸ்ரீதரன் கூறியதாவது:
வெளியில் இருந்து உடலுக்குள் வரும் பாக்டீரியா, வைரஸ் கிருமிகளை உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அணுக்கள் தாக்கி அழிக்கும். சில நேரங்களில் அணுக்களில் ஏற்படும் சில மாற்றங்களின் காரணமாக, எதை எதிர்த்து அழிப்பது என்று தெரியாமல் உடலில் உள்ள தசை, ரத்தக் குழாய் போன்ற பகுதிகளை தாக்கும்.
இவ்வாறுதான் சிறுவனின் நோய் எதிர்ப்பு சக்தி அணுக்களில் மாற்றம் ஏற்பட்டு முக்கிய ரத்தக் குழாயான மகாதமனியை தாக்கியுள்ளது. இதனால், இதயத்தின் கீழ்பகுதியில் மகாதமனியில் ஓட்டை விழுந்து, ரத்தம் வெளியேறி கட்டியாக மாறி, பலூன் போல வீங்கிவிட்டது.
பரிசோதித்தபோது, கட்டி வெடிக் கும் நிலையில் இருந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுவ னுக்கு, 5 மணி நேர அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றியுள்ளோம். அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிறுவன் தற்போது நலமாக இருக்கிறார்.
3 லட்சம் பேரில் ஒருவருக்குதான் இதுபோன்ற பாதிப்பு வரும். முதல்வ ரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் செய்துகொள்ள ரூ.6 லட்சம் வரை செலவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.