Published : 09 Nov 2019 07:24 PM
Last Updated : 09 Nov 2019 07:24 PM

சென்னை ஐஐடி விடுதியில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

சென்னை

சென்னை ஐஐடியில் கேரள மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மதிப்பெண் குறைவாக எடுத்ததால் அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

கேரளா மாநிலம் கொல்லம் அருகிலுள்ள கிளி கொல்லூர் பகுதியில் இருக்கும் பிரியதர்ஷினி நகரைச் சேர்ந்தவர் பாத்திமா லத்தீப் (18). இவர் ஐஐடியில் எம்.ஏ. முதலாம் ஆண்டு (humanities) படித்து வந்தார். ஐஐடி வளாகத்திலேயே சராவியு பெண்கள் விடுதியில் தங்கியிருந்தார்.

கடந்த வாரம் உள் தேர்வு (internal exam) நடந்தது. இந்தத் தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் மனமுடைந்து காணப்பட்டார். பின்னர் நேற்று இரவு 12 மணி அளவில் தனது அறைக்குள் சென்ற பாத்திமா காலையில் வெளியே வரவில்லை.

வழக்கமாக கேரளாவிலிருந்து மகளுடன் பேசும் அவரது தாய் செல்போனில் அவரை அழைத்தபோது அழைப்பு போய்க்கொண்டே இருந்துள்ளது. ஆனால் பாத்திமா போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது தாய் இன்று காலை 11.30 மணியளவில் பக்கத்து அறையில் தங்கியிருக்கும் அவரது தோழிக்கு போன் செய்துள்ளார்.

அவர் போனை எடுக்கவே, ''பாத்திமா எங்கேம்மா போன் செய்தால் ரிங் போகுது எடுக்கவே இல்லை'' என்று கூறியுள்ளார். பக்கத்து அறை மாணவி, ''அறையில்தான் இருப்பாள் நான் சென்று பார்க்கிறேன்'' என அவரது அறைக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது
பாத்திமாவின் அறை பூட்டிக் கிடந்தது.

கதவை வெகுநேரம் தட்டியும் பாத்திமா திறக்காததால் மற்றவர்களிடம் விஷயத்தைச் சொல்ல, அவர்களும் தட்டிப் பார்க்க, கதவு திறக்கப்படவில்லை. இதனால் கதவை உடைத்துச் சென்று பார்த்துள்ளனர்.

உள்ளே மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் பாத்திமா பிணமாகத் தொங்கியுள்ளார். உடனடியாக இதுகுறித்து கோட்டூர்புரம் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதிக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பாத்திமா லத்தீப்பின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மாணவி உயிரிழந்த விவகாரம் குறித்து கேரளாவில் உள்ள பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவி தற்கொலை செய்துகொண்டாரா? தேர்வில் மதிப்பெண் குறைவுதான் தற்கொலைக்குக் காரணமா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x