Published : 09 Nov 2019 07:02 PM
Last Updated : 09 Nov 2019 07:02 PM

பண மதிப்பிழப்பு விவகாரம்; நீங்கதான் மெச்சிக்கணும்: எஸ்.வி.சேகருக்கு கஸ்தூரி பதில்

பண மதிப்பிழப்பு விவகாரம் குறித்த எஸ்.வி.சேகரின் ட்வீட்டுக்கு, ‘நீங்கதான் மெச்சிக்கணும்’ எனப் பதில் அளித்துள்ளார் கஸ்தூரி.

ஊழல், கறுப்புப் பணம், கள்ள நோட்டு ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில், நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி அறிவித்தார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு நேற்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அந்நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

சமூக வலைதளங்களிலும் பண மதிப்பிழப்பு சமயத்தில் தங்களுக்கு நடந்த அனுபவங்கள் தொடர்பாகவும் பல்வேறு பதிவுகளைக் காண முடிந்தது. பண மதிப்பிழப்பை ஆதரித்துக் கருத்து தெரிவித்த பிரபலங்கள், தலைவர்களின் ட்விட்டர் கணக்கையும் குறிப்பிட்டு, நெட்டிசன்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், பண மதிப்பிழப்பு தொடர்பாக பாஜக கட்சியைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் பேசிய வீடியோ பதிவுகளை எடுத்து, அவருடைய ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு, ‘பண மதிப்பிழப்பு வெற்றியா?’ என்று நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு எஸ்.வி.சேகர் தனது ட்விட்டரில் பதிலளித்தார்.

அந்தப் பதிவில், “பண மதிப்பிழப்பு மிகப்பெரிய வெற்றி. 2016-17-ல் வங்கிகளில் கண்டறியப்பட்ட கள்ள நோட்டுகளின் மதிப்பு ரூ. 43.47 கோடி, 2017-18-ல் ரூ. 23.35 கோடி, 2018-19-ல் ரூ. 8.24 கோடி . நம்ம நாட்டு நோட்டு அடிக்கிற மிஷினை பாகிஸ்தானுக்கு வித்தவங்களால் வந்த கோளாறு சரி செய்யப்படுகிறது" என்று தெரிவித்தார்.

அவரின் இந்தப் பதிவுக்கு, “நீங்கதான் மெச்சிக்கணும். அந்த மாசம் என் கண்ணெதிரே சில திடீர் பணக்காரங்க உருவானாங்க. நகை விற்பனை அமோகம். மத்தபடி நீங்க சொன்ன மாதிரி எதுவும் நடக்கல. என் அனுபவத்துல, லஞ்சம், வரி ஏய்ப்பு, பணப் பரிமாற்றம் எல்லாம் 2 மடங்கு ஆயிடுச்சு. 1000 ரூபாய் நோட்டுக்குப் பதில் 2000 ரூபாய் நோட்டு” எனப் பதில் அளித்துள்ளார் கஸ்தூரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x