அயோத்தி தீர்ப்பை நாங்கள் மனதார வரவேற்கிறோம்: மதுரை ஆதினம்

அயோத்தி தீர்ப்பை நாங்கள் மனதார வரவேற்கிறோம்: மதுரை ஆதினம்
Updated on
1 min read

மதுரை

அயோத்தி தீர்ப்பை நாங்கள் மனதார வரவேற்கிறோம் என மதுரை ஆதினம் பேட்டியளித்துள்ளார்.

முன்னதாக இன்று (சனிக்கிழமை) காலை அயோத்தி வழக்கில், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயிலைக் கட்ட மத்திய அரசு 3 மாதங்களுக்குள் அறக்கட்டளை அமைக்க வேண்டும், மசூதி அமைக்க அயோத்தியிலேயே வேறு முக்கியமான பகுதியில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதுதொடர்பாக மதுரை ஆதினம் அளித்த பேட்டியில், "இந்தத் தீர்ப்பை நாங்கள் மனதார வரவேற்கிறோம். இந்தத் தீர்ப்பு இந்துக்கள் பெருமை கொள்ளவோ, இஸ்லாமியர்கள் வருத்தம் கொள்ளக் கூடிய தீர்ப்போ அல்ல. அயோத்தி தீர்ப்பை இருதரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில், இது யாருக்கும் பாதகமான தீர்ப்பு அல்ல.

தீர்ப்பை ஒட்டி எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படக்கூடாது. இது நல்ல, நியாயமான எல்லோரும் ஏற்க வேண்டிய தீர்ப்பு. சட்டத்தை முன்வைத்து வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு.

ராமர் கோயிலைக் கட்ட அமைப்பு ஏற்படுத்தும் உத்தரவை வரவேற்கிறோம். அனைவருக்கும் சமமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. மசூதி கட்ட நிலம் ஒதுக்க வேண்டும் என்ற உத்தரவும் வரவேற்கத்தக்கது.

எப்படி, சபரிமலையில் வாவரை தரிசித்த பின்தான், ஐயப்பனை வணங்குகிறோம். அதே போல் அயோத்தியில் மசூதி சென்று வழிபட்டு ராமரை வணங்கி மதநல்லிணகத்தோடு ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

இந்துக்கள் அயோத்தி சென்றால் ராமர் கோயிலுக்கும் செல்ல வேண்டும். பாபர் மசூதிக்கும் செல்ல வேண்டும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in