

சென்னையில் குடிநீர் லாரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், குடிநீர் வாரியம் புதிய வகை வாகனங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளது.
சென்னை குடிநீர் வாரியம் தினமும் சுமார் 580 மில்லியன் லிட்டர் நீர் வழங்கி வருகிறது. இதில் சுமார் 38 மில்லியன் லிட்டர் நீரை லாரிகள் மூலம் வழங்கி வருகிறது. சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்தத்தில் 6 ஆயிரம், 9 ஆயிரம் மற்றும் 16 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சுமார் 500 லாரிகள் ஓடுகின்றன. குழாய்களின் மூலம் வழங்கப்படும் நீரின் அளவு குறைந்துவரும் நிலையில் குடிநீர் லாரிகளின் தேவை அதிகமாகி வருகிறது.
இதுபோன்ற அவசர தேவை காலத்தில் மூன்று மாத ஒப்பந்தத்தில் குடிநீர் வாரியம் லாரிகளை வாடகைக்கு எடுக் கிறது. ஆனால் மூன்று மாத காலத்துக்கு லாரிகளை வாட கைக்கு தர இயலாது என்று லாரி ஒப்பந்ததாரர்கள் கூறு கின்றனர்.
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய லாரி ஒப்பந்த தாரர்கள் சங்கத்தின் தலைவர் பி.எஸ்.சுந்தரம் கூறும்போது, “மூன்று மாதங்களுக்குள் மழை பெய்ய ஆரம்பித்து லாரிகளின் தேவை குறைந்து விடும். எங்களது கட்டணமும் குறைந்து விடும். மேலும் தண்ணீருக்கு லாரிகளை அனுப்பும் போது லாரிகளில் அதற்காக பம்புகள், குழாய் களைப் பொருத்த வேண்டும். இதற்கென தனியாக ரூ.1 லட்சம் செலவாகும். தண்ணீர் லாரியை உடனே வேறு தேவை களுக்காக பயன்படுத்தவும் முடியாது”என்றார்.
இதைத்தொடர்ந்து தண் ணீர் லாரிகளுக்கு பதிலாக சின்டெக்ஸ் டேங்குகள் பொருத்திய புதிய வகை வாகனங்களை குடிநீர் வாரி யம் பயன்படுத்தத் தொடங்கி யுள்ளது. டெம்போ அல்லது சரக்கு வாகனத்தின் பின் புறத்தில் 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு சின்டெக்ஸ் டேங்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் குடிநீர் குழாய் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை மாநக ருக்குள் இது போன்று சுமார் 30 லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அதிகாரி விளக்கம்
இது குறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரி கூறும்போது, “சாதாரண லாரிகள் கிடைக்காததால் இந்த ஏற்பாட்டை செய்துள்ளோம். சாதாரண லாரிகளில் பம்புகள் பொருத்தப்பட்டுள்ளதால், தெருக்களில் உள்ள நீர் தொட்டிகளை நிரப்ப அந்த லாரிகளை பயன்படுத்து கிறோம். மக்கள் நேரடியாக குடங்களில் தண்ணீர் பிடிக்க புதிய வகை லாரிகள் பயன் படுத்தப்படுகின்றன” என்றார்.