

இளையராஜவின் காப்புரிமை பெற்ற இசை வடிவங்கள் தொடர்பான வழக்கில் சாட்சிகளை 3 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 1970-ம் ஆண்டு முதல் ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். காப்புரிமை பெற்ற இவரது இசை வடிவங்களை ஒலிநாடா, இசைத்தட்டு தயாரிக்கும் எக்கோ உள்ளிட்ட நிறுவனங்கள் பயன்படுத்தின. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார். நீதிபதி ஆர்.சுப்பையா இவ்வழக்கை விசாரித்து, இளையராஜாவின் இசை வடிங்களைப் பயன்படுத்த எக்கோ உள்ளிட்ட 5 நிறுவனங்களுக்கு தடை விதித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து எக்கோ நிறுவனம், அகி மியூசிக் ஆகியவை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு நேற்று இவ்வழக்கை விசாரித்து பிறப்பித்த உத்தரவு:-
உயர் நீதிமன்ற வழக்குகளில் சாட்சிகளை விசாரிக்கும் மாஸ்டர் கோர்ட்டில் பணிப் பளு அதிகமாக இருப்பதால், இவ்வழக்கில் சாட்சியங்களைப் பதிவு செய்ய ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி கோகுல்தாஸை நியமிக்கிறோம். அவருக்கு சம்பளமாக ரூ.1 லட்சம் நிர்ணயிக்கப்படுகிறது. இவ்வழக்கில் சாட்சியங்களை 3 மாதத்துக்குள் பதிவு செய்து, உயர் நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன்பிறகு இவ்வழக்கை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.