சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் கூடுதலாக 3 ரோந்து வாகனங்கள்

சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் கூடுதலாக 3 ரோந்து வாகனங்கள்
Updated on
1 min read

சென்னை

அயோத்தி தீர்ப்பை ஒட்டி அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் கண்காணிக்கவும், சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்கவும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் கூடுதலாக 3 ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2010 செப்டம்பர் 30-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மேல்முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் அயோத்தி வழக்கில் நாள்தோறும் விசாரணை நடத்தப்பட்டு இருதரப்பு வாதங்கள் கடந்த மாதம் 16-ம் தேதி நிறை வடைந்தன.

முன்னதாக, அயோத்தி ராமஜென்ம பூமி- பாபர் மசூதி நில விவகாரத்தில் சுமுகத் தீர்வு காண நியமிக்கப்பட்ட 3 பேர் கொண்ட சமரசக் குழு கடந்த மாதம் 16-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ரகசிய அறிக்கையை தாக்கல் செய்தது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பாக தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட் டது. இந்நிலையில் அயோத்தி வழக்கில் இன்று காலை 10.30 மணி முதல் தீர்ப்பு வெளியாகி வருகிறது.

தற்போது தீர்ப்பை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடாக சென்னையில் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் கூடுதலாக 3 ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டு உதவி ஆய்வாளர் தலைமையில் ரோந்துப் பணி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in