

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்துவரும் நிலையில், சட்டம் - ஒழுங்கு குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் அரசு நிகழ்ச்சிகள் ஒரு வாரம் ரத்து செய்யப்பட்டிருந்தன. 7 நாள் துக்கம் நேற்று முன்தினம் முடிந்ததைத் தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதா நேற்று காலை 11.35 மணிக்கு தலை மைச் செயலகத்துக்கு வந்தார்.
தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதற்காக, பேருந்து நிலையங்களில் அமைக்கப் பட்ட தனி அறைகளை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
மார்த்தாண்டம் அருகே மதுக் கடையை மூடக் கோரி போராட் டம் நடத்திய காந்தியவாதி சசிபெரு மாள் திடீரென மரணமடைந்தார். இதையடுத்து, தமிழகத்தின் பல் வேறு இடங்களில் மதுவுக்கு எதிராக போராட்டங்கள் அதிகரித்துள்ளன.
சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்றும் மதுவுக்கு எதிரான போராட்டங்கள் நடந்தன. பூரண மதுவிலக்கு கோரி மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன நிலையில், தமிழக சட்டம் - ஒழுங்கு குறித்து முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியுள்ளார்.
கூட்டத்தில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வ நாதன், வைத்திலிங்கம், தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், உள் துறைச் செயலாளர் அபூர்வ வர்மா, டிஜிபி அசோக்குமார், கூடுதல் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், உளவுப் பிரிவு ஐஜி டேவிட்சன் தேவாசீர் வாதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.