

சென்னை
உச்ச நீதிமன்றத்தில் வெளியாகவுள்ள அயோத்தி வழக்கின் தீர்ப்பை நாட்டு மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு நாட்டின் உறுதிக்கும், ஒற்றுமைக்கும் உதவிகரமாகச் செயல்பட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2010 செப்டம்பர் 30-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மேல்முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் அயோத்தி வழக்கில் நாள்தோறும் விசாரணை நடத்தப்பட்டு இருதரப்பு வாதங்கள் கடந்த மாதம் 16-ம் தேதி நிறை வடைந்தன. முன்னதாக அயோத்தி ராமஜென்ம பூமி- பாபர் மசூதி நில விவகாரத்தில் சுமுகத் தீர்வு காண நியமிக்கப்பட்ட 3 பேர் கொண்ட சமரசக் குழு கடந்த மாதம் 16-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ரகசிய அறிக்கையை தாக்கல் செய்தது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பாக தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட் டது. இந்நிலையில் அயோத்தி வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு இறுதித் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக இன்று வாசன் வெளியிட்ட அறிக்கையில், ''உச்ச நீதிமன்றத்தில் அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ள நிலையில் தமிழக மக்கள் உட்பட நாட்டு மக்கள் அனைவரும் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். நம் நாட்டின் ஒற்றுமைக்கும், உறுதிக்கும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது நம் கடமை.
இந்தியாவில் ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தில் அனைவரும் முன்னேற வெண்டும், நாடும் வளம் பெற வேண்டும். மத்திய மாநில அரசுகள் நாட்டு மக்களையும், நாட்டையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை உணர்ந்து செயல்படும் போது நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் நீதிக்கும், சட்டத்திற்கும் உட்பட்டு நம் பொறுப்பையும், கடமையையும் நிலைநாட்ட வேண்டும்.
நாட்டை அமைதிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டியது ஒட்டு மொத்த நாட்டு மக்களின் கடமையாக இருக்கிறது.
எனவே உச்சநீதிமன்றம் வழங்க இருக்கின்ற அயோத்தி தொடர்பான வழக்கின் தீர்ப்பை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டு இந்திய நாட்டின் உறுதிக்கும், ஒற்றுமைக்கும் உதவிகரமாகச் செயல்பட வேண்டும்’’ என்று வாசன் தெரிவித்துள்ளார்.