

பண மதிப்பிழப்பு மிகப்பெரிய வெற்றி என்று தனது ட்விட்டர் பதிவில் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஊழல், கறுப்புப் பணம், கள்ளநோட்டு ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் நாட்டில் புழக்கத்திலிருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி அறிவித்தார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு நேற்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அந்நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
சமூக வலைதளங்களிலும் பண மதிப்பிழப்பு சமயத்தில் தங்களுக்கு நடந்த அனுபவங்கள் தொடர்பாகவும் பல்வேறு பதிவுகளைக் காண முடிந்தது. பண மதிப்பிழப்பை ஆதரித்துக் கருத்து தெரிவித்த பிரபலங்கள், தலைவர்களின் ட்விட்டர் கணக்கையும் குறிப்பிட்டு, நெட்டிசன்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், பண மதிப்பிழப்பு தொடர்பாக எஸ்.வி.சேகர் பேசிய வீடியோ பதிவுகளை எடுத்து அவருடைய ட்விட்டர் தளத்தைக் குறிப்பிட்டு 'பண மதிப்பிழப்பு வெற்றியா' என்று நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பாஜக கட்சியைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பதிவில் பதிலளித்துள்ளார்.
அந்தப் பதிவில், "பண மதிப்பிழப்பு மிகப்பெரிய வெற்றி. 2016-17ல் வங்கிகளில் கண்டறியப்பட்ட கள்ள நோட்டுகளின் மதிப்பு ரூ.43.47 கோடி, 2017-18ல் ரூ.23.35 கோடி, 2018-19ல் ரூ.8.24 கோடி . “நம்ம நாட்டு நோட்டு அடிக்கிற மிஷினை பாகிஸ்தானுக்கு வித்தவங்களால் வந்த கோளாறு சரி செய்யப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார் எஸ்.வி.சேகர்.