

விருதுநகர்
அயோத்தி விவகாரம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு இன்று (நவ.9) வெளியாவதை ஒட்டி விருதுநகர் மாவட்டம் போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு 2,255 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வெளியாவதையொட்டி நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து ரயில் நிலையங்கள் பேருந்து நிலையங்கள் கடைவீதிகள் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ரயில் பயணிகளின் உடமைகள் அனைத்தும் தீவிரமாக பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே ரயில் நிலையத்திற்குள் செல்ல பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். அதோடு ரயிலில் வரும் பயணிகளின் உடமைகளை ரயில்வே போலீஸார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். முக்கிய ரயில் வழித்தடங்கள் மற்றும் ரயில்வே நிலையங்களிலும் வெடிகுண்டு தடுப்பு ப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர்.
தமிழக அரசின் முத்திரை சின்னமாக விளங்க கூடிய ராஜகோபுரம் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் 2 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோயிலின் உள்புறம் மற்றும் வெளிபுறங்களில் வெடிகுண்டு தடுப்பு போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.மேலும் சிசிடிவி கேமிரா மூலம் காவல் துறையினர் பக்தர்களைக் கண்காணித்து வருகின்றனர்.
அயோத்தி விவகாரம் தீர்ப்பு வருவதையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் நக்சல் தடுப்புப் பிரிவு போலீஸார் துப்பாக்கியுடன் வாகன சோதனை ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சமூக விரோதிகள் மற்றும் மர்ம நபர்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வகையிலும் மேற்கு தொடர்ச்சி அடிவார பகுதிகளான செண்பக தோப்பு பகுதிகளில் நக்சல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலையில் 10க்கும் மேற்பட்ட நக்சல் தடுப்பு பிரிவு போலீஸார் துப்பாக்கி ஏந்தியவாறு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
வனப் பகுதிகளில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதா அல்லது சமூக விரோதிகள் வனப்பகுதியில் பதுங்கி உள்ளனரா என்பது குறித்து நக்சல் தடுப்பு போலீஸார் மலைப் பகுதிகளில் தங்கி சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்கள் பள்ளிவாசல்கள் மசூதிகள் கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் 10 டி.எஸ்.பி.கள், 30 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 2,255 போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.