

தூத்துக்குடி
தூத்துக்குடியில் சட்டவிரோதமாக 10,500 டன் இலுமனைட் தாதுவை பதுக்கி வைத்திருந்ததாக தனியார் ஆலை (வி.வி.டைட்டானியம் பிக்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் பெயின்ட் தயாரிக்கும் தனியார் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு தூத்துக்குடி வஉசி துறைமுகம் வழியாக கடந்த 25-ம் தேதி நார்வே நாட்டிலிருந்து கப்பலில் இலுமனைட் தாது வந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாது மணல் ஏற்றுமதிக்கும், தாது மணலை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லவும் ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளதால், இலுமனைட் தாதுவை இறக்க அனுமதிக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி வஉசி துறைமுக பொறுப்புக் கழக தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக ஆலை நிர்வாகத்துக்கும் கடிதம் அனுப்பப்பட்டது.
இதனை எதிர்த்து ஆலை தரப்பில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், `இலுமனைட் தாதுவை கப்பலில் இருந்து இறக்கலாம். ஆனால், வெளியே கொண்டு செல்லக் கூடாது. துறைமுகத்திலேயே அதனை சேமித்து வைக்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும் ஆலை தரப்பினர் இலுமனைட் தாதுவை கப்பலில் இருந்து இறக்கி சிப்காட் வளாகத்தில் உள்ள தங்களது ஆலைக்கு கொண்டு சென்று சேமித்து வைத்துள்ளனர்.
இத்தகவல் அறிந்த அதிகாரிகள் அந்த ஆலையில் சோதனை நடத்தியுள்ளனர். அங்கு 10,500 டன் இலுமனைட் தாது இருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸார், அந்த ஆலை மீது இந்திய தண்டனை சட்டம் 420, 379 மற்றும் தாது பொருட்கள் சட்டம் 21 (1), 21 (4), 21 (4ஏ) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நிறுவனம் விளக்கம்
இதற்கிடையே வி.வி.டைட்டானியம் பிக்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:ஏற்றுமதி, இறக்குமதியில் தலையிட மாவட்ட ஆட்சியருக்கு எந்த அதிகாரமும் இல்லை. நாங்கள் கடந்த 4 ஆண்டுகளாக இலுமனைட் இறக்குமதி செய்து வருகிறோம். இந்த தாதுவை ரூ.15.14 கோடி கொடுத்து கொள்முதல் செய்துள்ளோம். இந்த வழக்கு தவறுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாங்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாட உள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.