

திருநெல்வேலி
தொடர் மழையால் அடவிநயினார் கோவில் அணை மீண்டும் நிரம்பும் நிலையில் உள்ளது. நீர்மட்டம் 131.50 அடியாக உயர்ந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை இயல்பைவிட கூடுதலாக பெய்தது. அதைத் தொடர்ந்து, வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால், அணைகள், குளங்களில் நீர்மட்டம் அதிகரித்தது. கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு ஆகிய 4 அணைகள் சமீபத்தில் நிரம்பின.
மழை அளவு
கடந்த சில நாட்களாக மழை யின்றி வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்றுமுன்தினம் இரவு இடி, மின்னலுடன் ஒரு சில பகுதிகளில் மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக அடவிநயினார் கோயில் அணை பகுதியில் 45 மி.மீ. மழை பதிவானது. குண்டாறு அணையில் 11 மி.மீ., சிவகிரியில் 7 மி.மீ., கருப்பாநதி அணையில் 4 மி.மீ., பாளையங்கோட்டையில் 2.20 மி.மீ., கடனாநதி அணை, செங்கோட்டை, திருநெல்வேலியில் தலா 2 மி.மீ. மழை பதிவானது.
அணைகள் நிலவரம்
பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததால், நீர்மட்டம் சற்று குறைந்துள்ளது. இந்த அணைகளுக்கான மொத்த நீர்வரத்து விநாடிக்கு 722 கனஅடியாக இருந்தது. 1,305 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. பாபநாசம் அணை நீர்மட்டம் 132.20 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 136.88 அடியாகவும் இருந்தது.
மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 41 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை. 132.22 அடி உயரம் உள்ள அடவிநயினார் கோவில் அணை கடந்த ஆகஸ்ட் மாதம் முழுமையாக நிரம்பியது.
அந்த அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு, சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று இந்த அணையின் நீர்மட்டம் 131.50 அடியாக இருந்தது. அணை இன்று மீண்டும் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீணாகும் தண்ணீர்
கால்வாய்களில் பாசன த்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள் ளதால், விவசாயிகள் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாளையங்கால்வாய் உட்பட சில கால்வாய்களில் தேவைக்கு அதிகமாக தண்ணீர் திறக்கப் பட்டுள்ளதால், சாகுபடி நடை பெறாத நிலங்களில் தண்ணீர் தேங்கி வீணாகிறது. எதிர்கால தேவையை கருத்தில்கொண்டு நாற்றங்காலுக்கு தேவையான அளவுக்கு கால்வாய்களில் தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று, விவசாயிகள் கூறுகின்றனர்.
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் மிதமான அளவில் தண்ணீர் விழுந்தது. சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.