Published : 09 Nov 2019 07:46 AM
Last Updated : 09 Nov 2019 07:46 AM

வெள்ளிக்கிழமைதோறும் நடைபெறும் முகாமில் மாற்றுத்திறனாளிகளை பரிசோதிக்க நரம்பியல் மருத்துவர்கள் வருவதில்லை: அரசு மருத்துவமனையில் அலட்சியம் காட்டுவதாக புகார் 

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாற்றுத்திறனாளி களுக்கு மருத்துவச் சான்றிதழ் வழங்கும் மருத்துவப் பரிசோதனை முகாம், வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து உதவியாளர்களுடன் மாற்றுத் திறனாளிகள் வருவர். நரம்பு மற்றும் எலும்பு மருத்துவர்கள் பரிசோதித்து, அவர்களது ஊனத்தின் தன்மை, அளவு குறித்து சான்று வழங்குவர்.

இதேபோல், மருத்துவமனையில் நேற்று காத்திருந்த மாற்றுத்திறனாளிகள் கூறும்போது, ‘நீண்ட நேரமாக காத்திருக் கிறோம். நரம்பியல் மருத்துவர் வர வில்லை. இதுதொடர்பாக மருத்துவமனை யில் இருந்த ஊழியர்களிடம் விசாரித்த போது, காத்திருங்கள், மருத்துவர் வருவார் என்று மட்டும் பதில் அளித்தனர். பரிசோதனை முகாம் நேரம் முடிவடைந்த நிலையில்தான், நரம்பியல் மருத்துவர் இனி வரமாட்டார் என தெரியவந்தது. இதையடுத்து எங்களுடன் வந்த உதவியாளர்களும் ஏமாற்றமடைந்தனர்' என்றனர்.

திருப்பூர் தெற்கு நகர அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கச் செயலாளர் ரமேஷ் கூறும்போது, ‘திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் முகாமுக்கு எலும்பு, நரம்பு மருத்துவர்கள் வர வேண்டும். கடந்த காலத்தில் விடுபடாமல் பங்கேற்று வந்தனர். ஆனால், சமீப காலமாக தொடர்ச்சியாக முகாமுக்கு வருவதில்லை. அதுகுறித்து கேட்டாலும் தெளிவான பதில் இல்லை.

உடுமலை, தாராபுரம், வெள்ள கோவில் உட்பட மாவட்டத்தின் தொலை தூர பகுதிகளில் இருந்தும் மாற்றுத் திறனாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர். குழுவாக சேர்ந்து தனியாக வாகனம் ஏற்பாடு செய்து, ரூ.2000 வரை வாடகை செலுத்தி மருத்துவமனைக்கு வருகின்றனர். இங்கு வந்தால் மருத்துவர் இல்லாமல் ஏமாற்றமடைகின்றனர். கால விரயமும், பண விரயமும் ஏற்படுவது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.

காலை முதல் மதியம் வரை காத்திருந்து பசியுடன் மீண்டும் தங்கள் ஊர்களுக்கு நெடுந்தூரம் திரும்பிச் செல்ல முடியாத நிலையில், வெளியே உணவகங்களுக்கும் செலவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இனிமேல் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை முகாமுக்கு உரிய மருத்துவர்கள் தவறாமல் பங்கேற்று, மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனை செய்து சான்றிதழ் அளிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், மருத்துவர் வருகை தரும் நேரம், எவ்வளவு நேரம் பரிசோதனை செய்வதற்காக இருப்பார்கள் என்பது போன்ற விவரங்களை, மாற்றுத்திறனாளிகளுக்கு தெரிவிப்பதற்கு உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்' என்றார்.

விடுப்பில் சென்றுவிட்டார்

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் கோபாலகிருஷ்ணன் ’இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, 'ஒரே ஒரு நரம்பியல் மருத்துவர்தான் உள்ளார். நரம்பியல் பிரிவு என்றால், சம்பந்தப்பட்ட மருத்துவர்தான் சான்றளிக்க முடியும். அவர் விடுப்பில் சென்றிருந்ததால், முகாமில் பங்கேற்க இயலாமல் இருந்திருக்கலாம். இதுதொடர்பாக விசாரிக்கிறேன்' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x