

சென்னை
செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று மலேசியா செல்கிறார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் 10 நாட்கள் அரசு முறைப்பயணமாக நேற்று காலை சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், உலக வங்கி அதிகாரிகளை சந்தித்து தமிழகத்தின் புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். சிகாகோ, நியூயார்க், வாஷிங்டன், ஹூஸ்டன் நகரங்களில் தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய வரும்படி அழைப்பு விடுக்கிறார். 10 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு வரும் 17-ம் தேதி அவர் தமிழகம் திரும்புகிறார்.
இந்நிலையில், செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று மலேசியா செல்கிறார். இதுகுறித்து செய்தித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, திருச்சியில் இருந்து இன்று (நவ. 9) காலை 9 மணிக்கு விமானத்தில் மலேசியா செல்ல உள்ளார். ‘மில்லியனில் ஒருவர்’ நிகழ்ச்சிஇன்று மதியம் 2 மணிக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடக்கவுள்ள ‘மில்லியனில் ஒருவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதன்பின், மாலை 6 மணிக்கு எம்ஜிஆர் பெயரில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்தை திறந்து வைக்கிறார்.
10-ம் தேதி மலேசிய தமிழ்ச் சங்க பிரமுகர் மணிவாசகம் இல்லத் திருமண நிகழ்ச்சியிலும் தேசிய பிரஸ் கிளப் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். அத்துடன் மேலும் சில நிகழ்ச்சிகளிலும் அமைச்சர் பங்கேற்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.