Published : 09 Nov 2019 07:41 AM
Last Updated : 09 Nov 2019 07:41 AM

ஜெயலலிதா நினைவிடம் கட்டும் பணி 90 சதவீதம் நிறைவு: அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தகவல்

திருச்சி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் கட்டும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது என மாநில செய்தி, விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித் துள்ளார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சர் ஏ.டி.பன்னீர்செல்வம், எம்.கே.தியாகராஜபாகவதர் ஆகியோருக்கு மணிமண்டபம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட் டுள்ளது.

இந்த இடத்தை அமைச்சர்கள் கடம்பூர் செ.ராஜூ, என்.நடராஜன், எஸ்.வளர்மதி ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது, அமைச்சர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியது:

முதல்வர் கே.பழனிசாமி தலைமையிலான அரசின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் ரூ.50.8 கோடியில் நினைவிடம் கட்டும் பணி 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அரசாணை வெளியிடப்பட்டு, ரூ.32 கோடியில் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கடலூரில் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டு, விரைவில் முதல் வரால் திறக்கப்படவுள்ளது.

சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்கும் பணி 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

அதேபோல, தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரத மாதாவுக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பேரரசர் பெரும்பிடுகு முத்தரை யருக்கு திருச்சியில் சிலை அமைக்கப் பட்டுள்ள நிலையில், தற்போதைய அரசால் சிலையுடன் கூடிய மணிமண்டபம் மற்றும் நூலகம் ஆகியவை ரூ.1 கோடியில் அமைக்கப்பட உள்ளன.

இதனருகிலேயே, நீதிக் கட்சியின் சர் ஏ.டி.பன்னீர்செல்வம் மற்றும் தியாகராஜ பாகவதர் ஆகிய இருவருக்கும் தலா ரூ.50 லட்சத்தில் சிலையுடன் கூடிய மணிமண்டபங்கள் அமைக்கப்படவுள்ளன.

ஜனவரிக்குள் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என்றார்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, கோட்டாட்சியர் அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x