காவலர் உடற்தகுதி தேர்வின்போது தருமபுரியில் மயங்கி விழுந்த இளைஞர் உயிரிழப்பு: சேலத்தில் தலையில் சுயிங்கம் ஒட்டி வந்தவர் தகுதி நீக்கம்

மயங்கி விழுந்து உயிரிழந்த இளைஞர் கவின் பிரகாஷ்
மயங்கி விழுந்து உயிரிழந்த இளைஞர் கவின் பிரகாஷ்
Updated on
2 min read

தருமபுரி/சேலம்

தருமபுரி ஆயுதப்படை வளாகத்தில் நடந்த காவலர்களுக்கான உடற் தகுதி தேர்வின்போது மயங்கி விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் தமிழக காவல்துறைக்கான 2-ம் நிலை காவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்காக தருமபுரி அடுத்த வெண்ணாம்பட்டியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் கடந்த 6-ம் தேதி முதல் உடற்தகுதி தேர்வு நடந்து வருகிறது. தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த உடற்தகுதி தேர்வில் பங்கேற்று வருகின்றனர். 3-ம் நாளான நேற்றைய தேர்வில் பங்கேற்க 900 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டம் சிந்தகம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சீனிவாசன். இவரது மகன் கவின் பிரகாஷ் (24). இவரும் நேற்றைய உடற்தகுதி தேர்வில் பங்கேற்றார். ஓட்டத் தேர்வில் பங்கேற்ற கவின் பிரகாஷ் ஓடி முடித்த பின்னர் ஓரிடத்தில் அமர்ந்து ஆசுவாசப்படுத்தலில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென கவின் பிரகாஷ் மயங்கி விழுந்துள்ளார். இதையறிந்த காவல் துறையினர் உடனடியாக அவரை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை மேற் கொண்ட மருத்துவர்கள், வரும் வழியிலேயே கவின் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். எனவே, அவரது உடல் அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனை கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தகுதி நீக்கம்

சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நடந்தது. இதில் உயரத்தை அதிகரித்துக் காட்ட தலையில் சுயிங்கம் ஒட்டி வந்தவரை காவல் அதிகாரிகள் தகுதி நீக்கம் செய்தனர்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் காவல் துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறையில் காலியாக உள்ள 2-ம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வில், சேலம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 2,762 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்வானவர்களுக்கு சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் இரண்டு நாட்கள் நடந்த உடற் தகுதி தேர்வில் 1600 பேர் பங்கேற்றனர். இவர்களில், 1036 பேர் தேர்ச்சி பெற்றனர்.

நேற்று மூன்றாவது நாளாக நடந்த தேர்வு டிஐஜி பிரதீப்குமார், காவல் கண்காணிப்பாளர் தீபாகாணிக்கர் மேற்பார்வையில் நடந்தது. இத்தேர்வில் 555 பேர் கலந்து கொண்ட நிலையில், ஒவ்வொருவருக்காக உயரம், மார்பளவை காவல் துறை அதிகாரிகள் அளவீடு செய்தனர். தொடர்ந்து 1,500 மீட்டர் ஓட்டம் நடந்த இடத்தில் போட்டியாளர்கள் தயாராக நின்றிருந்தனர்.

அப்போது, காவல் துறை அதிகாரிகள் உயரத்தை அதிகரித்துக் காட்ட யாரேனும் மோசடி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனரா என, இளைஞர்களின் தலையை தடவிப் பார்த்து சோதனை செய்தனர். ஒரு இளைஞர் தலையை அதிகாரிகள் தடவி பார்த்தபோது, கை ஒட்டியதால் சந்தேகமடைந்து, அவரை தனி இடத்துக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். இந்த சோதனையில் அவரது உயரத்தை அதிகரித்துக்காட்ட வேண்டி தலையில் உருண்டையாக சுயிங்கம் ஒட்டிக் கொண்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா காணிக்கர், அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்த தயாநிதி என்பது தெரியவந்தது. அவரை உடற்தகுதி தேர்வில் இருந்து தகுதி நீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in