Published : 09 Nov 2019 07:28 AM
Last Updated : 09 Nov 2019 07:28 AM

விபத்து, நெரிசலை ஏற்படுத்தும் வகையில் மாநகரில் வாகன ஓட்டுநர்களை அச்சுறுத்தும் சேதமான சாலைகள்: சீரமைக்க கோவை மாநகராட்சிக்கு வலியுறுத்தல்

கோவை

கோவை மாநகரில் வாகன ஓட்டுநர் களை அச்சுறுத்தும் வகையில், குண்டும், குழிகளாக காணப் படும் சாலைகளை சீரமைக்க மாநகராட்சிக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் 19 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மாநகரின் 100 வார்டுகளில் 3,500-க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளன. 4.50 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 3.80 லட்சத்துக்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளன. மாநகரில் ஏறத்தாழ 800 கிலோ மீட்டர் தூரத்துக்கு மாநகராட்சி சாலைகள், 200 கிலோ மீட்டர் தொலைவுக்கு மாநில நெடுஞ்சாலை, சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகள் செல்கின்றன. மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ், மாநகரில் பாதாள சாக்கடை திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதலில், மாநகராட்சியின் பழைய 72 வார்டுகள், அதாவது ஒருங்கிணைக்கப்பட்ட 60 வார்டுகளில் 3 கட்டங்களாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த, கடந்த 2010-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக ரூ.69.65 கோடி மதிப்பில் 166.72 கிலோ மீட்டர் தூரத்துக்கும், 2-ம் கட்டமாக 56.30 கோடி மதிப்பில் 126 கிலோ மீட்டர் தூரத்துக்கும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிக்கப்பட்டன. 3-வது கட்டமாக ரூ.143.65 கோடி மதிப்பில் 297.46 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாதாள சாக்கடை திட்டப்பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, தற்போது வரை பணிகள் தொடர்கின்றன. 3 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டு, 9 ஆண்டுகளை கடந்தும் பாதாள சாக்கடைப்பணி தொடர்கிறது. திருச்சி சாலை, ஒண்டிப்புதூர் உள்ளிட்ட சில பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நிலுவையில் உள்ளன.

மாநகரில் பாதாள சாக்கடைப் பணி, குடிநீர் குழாய் பதிக்க, கேபிள், தொலைபேசி, இணையதள வயர்கள் பதிக்கவும், பாதாள சாக்கடை குழாய் வீட்டு இணைப்பு வழங்கவும் சாலைகள் அடிக்கடி தோண்டப்படுகின்றன. ஆனால் சாலைகள் சீரமைப்புப் பணி மந்தமாகத்தான் நடக்கின்றன.

மாநகராட்சிக்கும், மற்ற துறைகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லையோ என எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் மாநகராட்சி நிர்வாகத்தால் சாலை புதியதாக போட்டுச் சென்ற சில நாட்களில் மற்ற துறையினர், அவர்களது துறை சார்ந்த பணிக்காக சாலையை தோண்டுகின்றனர். இதனால் புதிய சாலை போடப்பட்டும் பயனில்லாமல் போகிறது. பாதாள சாக்கடைப் பணி மேற்கொள்ளப்படும் சாலைகளும் சேதமடைந்து காணப்படுகிறது.

மக்கள் அவதி

ஆவாரம்பாளையத்தை சேர்ந்த ராஜ்குமார் கூறும் போது,‘‘தற்போதைய சூழலில், மாநகரின் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகள், பொதுமக்கள் சிரமப்பட்டு செல்லும் வகையில் மேடு, பள்ளங்களாகவும், குண்டும், குழிகளாகவும் காணப்படுகின்றன. இந்த குழிகளை கடந்து வாகன ஓட்டுநர்கள் வளைந்து, நெளிந்து, சர்க்கஸ் வித்தைகளை பயன்படுத்தி தான் செல்ல வேண்டியுள்ளது. நான் ஆவாரம்பாளையத்தில் இருந்து தினசரி பேரூருக்கு இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்று வருகிறேன். இந்த குண்டும், குழி சாலைகளை கடந்து செல்வதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. சில இடங்களில் காணப்படும் குழிகளை முறையாக தார் ஊற்றி சீீரமைக்காமல், தற்காலிகமாக மண், ஜல்லிக்கற்களை போட்டு சீரமைக்கின்றனர். அந்த இடத்தில் மழையின்போது சேறும் சகதியுமாகவும், மற்ற நேரங்களில் புழுதி பறந்தும் காணப்படுகிறது. பாதாள சாக்கடை திட்டப்பணி நடக்கும் சாலைகளும் பழுதடைந்து, வாகனங்கள் செல்ல முடியாத சூழல் உள்ளன.

மாநகரில் ஒரு சில இடங்களை தவிர்த்து, பெரும்பாலான இடங்களிலுள்ள ஒவ்வொரு வீதியிலும் குறைந்தபட்சம் 3 முதல் 5 இடங்களில் குழிகள் காணப்படுகின்றன. பீளமேடு, ஆவாரம்பாளையம், கணபதி, காந்திபுரம், பழையூர், ரத்தினபுரி லட்சுமி புரம் சாலை, உக்கடம் - செல்வபுரம் சாலை சந்திப்பு, புட்டுவிக்கி சாலை, தெலுங்குபாளையம், கொறத்தோட்டம், விஜி ராவ் நகர் சாலை, ஹோப்காலேஜ், மசக்காளிபாளையம், கோவைப்புதூர், சவுரிபாளையம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், எஸ்ஐஎச்எஸ் காலனி, நஞ்சுண்டாபுரம் சாலை, ராமநாதபுரம் உட்புறப் பகுதிகள், புலியகுளம், காட்டூர், சாயிபாபா காலனி, வடகோவை, ஆர்.எஸ்.புரம், டி.பி.சாலை, மருதமலை சாலை, துடியலூர் சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. சேதமடைந்த சாலைகளில் அடிக்கடி கனரக வாகனங்கள் சிக்கி விபத்தை ஏற்படுகின்றன. சேதமடைந்த சாலைகளை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகத்தினர் ‘பேட்ஜ் வொர்க்’ நடவடிக்கைகளையாவது மேற்கொள்ள வேண்டும்,’’ என்றார்.

ரூ.60 கோடியில் சீரமைப்புப் பணி

கோவை மாநகராட்சி உயரதிகாரி ஒருவர் கூறும் போது,‘‘கோவை மாநகரில் சேதமடைந்த சாலைகள் சீரமைப்புப் பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளும் போது, செல்லும் வழிகளில் உள்ள குழிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ரூ.60 கோடி மதிப்பில் 126 சாலை பேட்ஜ் வொர்க் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 900-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள குழிகள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன. தேவைப்படும் இடங்களில் மறுதார்தளம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,’’ என்றார்.

உக்கடம் - புட்டுவிக்கி சாலை

உக்கடம் - ஆத்துப்பாலம் சாலையில் மேம்பாலம் கட்டும் பணியால், பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை நோக்கி செல்லும் வாகன ஓட்டுநர்கள் உக்கடம் செல்வபுரம் பைபாஸ் சாலை வழியாக புட்டுவிக்கி தரைப்பாலத்தை கடந்து செல்ல வேண்டியுள்ளது. இந்த சாலையில் பல்வேறு இடங்களில் குண்டும் குழிகளாக காணப்படுகிறது. தினசரி காலை, மாலை நேரங்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் காணப்படும் குழிகளை, முறைாக தார் அமைத்து சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இங்குள்ள தெருவிளக்குகளையும் தடையின்றி எரியும் வகையில் சீரமைக்க வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x