Published : 09 Nov 2019 07:20 AM
Last Updated : 09 Nov 2019 07:20 AM

தாம்பரம்–திண்டிவனம் இடையே சுங்கச்சாவடிகளின் உரிமம் காலாவதியானதால் சுங்கம் வசூலிக்க தடை கோரி வழக்கு: நெடுஞ்சாலைத் துறை ஆணையம் பதிலளிக்க உத்தரவு

சென்னை

தாம்பரம் திண்டிவனம் இடையே உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளின் உரிமம் நேற்றுடன் காலாவதியாகிவிட்ட தால், சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கில், நெடுஞ்சாலைத் துறை ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக திருச்சியைச் சேர்ந்த நேதாஜி பவுண்டேஷன் சார்பில் வழக்கறிஞர் ஏ.ஜோசப் சகாயராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், ‘‘சென்னை தாம்பரம் திண்டிவனம் இடையே பரனூர் மற்றும் ஆத்தூர் ஆகிய இடங்களில் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகள் அமைத் தல், அதற்கான சுங்கக் கட்டணம் வசூலித்துக் கொண்டு செயல் பாட்டுக்கு கொண்டுவருதல், பின்னர் அதை அரசுக்கு மாற்றுதல் என்ற ‘பிஓடி’ திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்டு வருகின்றன.

தாம்பரம் திண்டிவனம் இடை யிலான பகுதியில் நெடுஞ்சாலை பணிகளை முடிக்க பெங்களூரைச் சேர்ந்த ஜிஎம்ஆர் என்ற தனியார் நிறுவனத்துடன் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி கடந்த 2005 ஏப்.1-ம் தேதியில் இருந்து 15 ஆண்டுகளுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க இந்த நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாலை பணிகளுக்காக ரூ.564 கோடியை செலவிட்டுள்ள இந்த நிறுவனம் இதுவரை ரூ.1,114 கோடியை வசூலித்துள்ளது. இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள சுங்கக் கட்டண உரிமம் நவ.8-ம் தேதியுடன் (நேற்று) காலாவதியாகி விட்டது. எனவே பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்க இந்த தனியார் நிறுவனம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத் துக்கு தடை விதிக்க வேண்டும்" என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், என்.சேஷசாயி ஆகி யோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது தேசிய நெடுஞ் சாலைகள் ஆணையம் சார்பில் மத்திய அரசின் உதவி சொலி சிட்டர்ஜெனரல் ஜி.கார்த்திகேயன் ஆஜராகி, ‘‘ஒப்பந்த காலம் முடிந்து விட்டாலும் சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது எனக் கூற முடியாது. மாறாக 40 சதவீத சுங்கக் கட்டணம் மட்டுமே வசூலிக் கப்படும். இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை" என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி கள், ‘‘தேசிய நெடுஞ்சாலைகள் எதுவும் முறையாக பராமரிக் கப்படுவதில்லை. மதுரவாயலில் ஆரம்பித்து வாலாஜா செல்லும் நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக கிடக்கிறது. நெடுஞ்சாலைகளி்ன் பராமரிப்பு மிக மோசமாக உள்ளது’’ என சுட்டிக்காட்டினர்.

இது தொடர்பாகவும் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்ததை அடுத்து நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை வம் நவ.29-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x