Published : 09 Nov 2019 07:17 AM
Last Updated : 09 Nov 2019 07:17 AM

தமிழ் அகராதியில் சேர்க்கப்பட்ட 9,000 புதிய சொற்கள்: மக்கள் பயன்படுத்த அமைச்சர் பாண்டியராஜன் அழைப்பு

சென்னை

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழறிஞர் வீரமாமுனிவர் பிறந்த தினம் ‘தமிழ் அகராதியியல் நாள்’ தொடக்க விழாவாக சென்னை எத்திராஜ் கல்லூரி வளாகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 9 ஆயிரம் புதிய தமிழ் சொற்கள் அடங்கிய குறுந்தகட்டை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் வெளியிட, பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது: சொற்குவை திட்டத்தின் மூலம் தமிழில் உள்ள சொற்கள் அனைத்தையும் தொகுத்து நிரல்படுத்துதல், அகராதி உருவாக்கம், புதிய கலைச்சொற்கள் உருவாக்குதல் போன்றபணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தில் கல்லூரி மாணவர்களும் இணைக்கப்பட்டு, புதிய கலைச் சொற்களை உருவாக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு சொற்குவை திட்டம் முக்கிய பங்காற்றும். தற்போது 9 ஆயிரம் புதிய தமிழ் சொற்கள் அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளன. இது தமிழ் வளர்ச்சியில் மிகப்பெரிய சாதனை. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழகதுணைவேந்தர் சுதாசேஷய்யன்,தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் கோ.பாலசுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்ந்து அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தமிழக அரசின் அனைத்துஅரசாணைகளும் தமிழில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் படித்தவர்களுக்கு அரசு துறை வேலைவாய்ப்பில் 20 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தற்போது 9 ஆயிரம் புதிய தமிழ்சொற்கள் அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளன. இவை சொற்குவை இணையதளத்தில் சேமித்து வைக்கப்படும். அனைவரும் அந்த சொற்களை பயன்படுத்தலாம். மேலும்,உலகில் உள்ள 6,500 துறைகளுக்கு தமிழில் பெயர் சூட்டப்பட்டுள்ளது’’ என்றார்.

இத்தாலியைச் சேர்ந்தவராக இருப்பினும் தமிழின் மீது நேசம் கொண்டவரான வீரமாமுனிவர் பிறந்த தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரதுசிலையின்கீழ், உருவப்படம்அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த படத்துக்கு, அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், பா.பெஞ்சமின், க.பாண்டியராஜன், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், செய்தித் துறை செயலர் மகேசன் காசிராஜன், இயக்குநர் பொ.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x