Published : 09 Nov 2019 07:10 AM
Last Updated : 09 Nov 2019 07:10 AM

சென்னை விமான நிலையம் - வண்டலூர் இடையிலான மெட்ரோ ரயில் விரிவாக்கத்துக்கு திட்ட அறிக்கை தயாரிப்பு பணி தொடக்கம்: 13 இடங்களில் ரயில் நிலையங்கள் அமைகின்றன

சென்னை

சென்னை விமான நிலையம் - வண்டலூர் இடையே மெட்ரோ ரயில் திட்டத்துக்கான முதல்கட்ட ஆய்வு முடிவுகள் திருப்தியாக உள்ளன. எனவே அடுத்தகட்டமாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் விமான நிலையத்தில் இருந்து வண்டலூர் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கம் செய்ய ஆய்வு மேற்கொள்ளப்படும் என முதல்வர் பழனிசாமி கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்திருந்தார். அதன்படி, மேற்கண்ட தடத்தில் முதல்கட்ட ஆய்வு களை மேற்கொள்ளும் பணியைமெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டது. இதில், எந்ததெந்த சாலைகள் வழியாக செல்வது, எவ்வளவு தூரம், வாகன நெரிசல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்திய பிறகு அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த ஆய்வின்முடிவுகள் திருப்தியாக இருப்பதால், அடுத்தகட்டமாக இந்த திட்டப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில் அடுத்தகட்ட போக்குவரத்து வசதியாக மெட்ரோ ரயில் வசதி உருவெடுத்து வருகிறது. இதை கருத்தில் கொண்டே மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் சென்னைவிமான நிலையம் - வண்டலூர் கிளாம்பாக்கம் வரையில் ஜிஎஸ்டிசாலையை ஒட்டி மெட்ரோ ரயில்சேவையை விரிவாக்கம் செய்வது குறித்து மக்களின் போக்குவரத்து தேவை, வழித்தடம் தேர்வு உள்ளிட்டவை தொடர்பான முதல்கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வின் முடிவுகள் திருப்தியாக இருப்பதால், அடுத்தகட்டமாக விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க முடிவு செய்து திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளோம்.

இதில், எவ்வளவு தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதைகளை அமைப்பது, எந்தெந்த இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்களை அமைப்பது, நிலம் கையகப்படுத்துவது, எந்தெந்த இடங்களில் சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் நிலையங்களை அமைப்பது, எந்தெந்த இடங்களில் உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரயில் நிலையங்களை அமைப்பது, திட்டத்தின் மொத்த மதிப்பீட்டு தொகைஎவ்வளவு?, எவ்வளவு பயணிகள்பயணம் செய்ய முடியும் உள்ளிட்டவிவரங்களை சேகரித்து அடுத்த6 மாதங்களில் முழு திட்டஅறிக்கையாக அரசிடம் வழங்குவோம். அதன்பிறகு, இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்புதலை அரசு அளிக்கும்.

சென்னை விமான நிலையம் - வண்டலூர் கிளாம்பாக்கம் இடையே 16 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்படும். இதில், 1.2 கி.மீ தூரத்துக்கு ஒரு ரயில் நிலையம் என்ற கணக்கீட்டின்படி சுமார் 13 இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய வாய்ப்புகள் உள்ளன. இதில், புறநகர் மின்சார ரயில் நிலையங்கள், முக்கிய பேருந்து நிலையங்களை இணைக் கும் வகையில் இந்த மெட்ரோ ரயில் தடம் இருக்கும். குறிப்பாக, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் ஆகிய இடங்களில் மற்ற இடங்களை காட்டிலும் பெரிய அளவிலான மெட்ரோ ரயில் நிலையங்கள் இடம்பெறும். இந்த திட்டப்பணிகளை நிறைவேற் றும்போது, மெட்ரோ ரயில் பயணி களின் எண்ணிக்கை பல மடங்கு உயர வாய்ப்புகள் உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x