எந்த நிலையிலும் ரஜினியை விலை கொடுத்து வாங்கிவிட முடியாது: தமிழருவி மணியன்

எந்த நிலையிலும் ரஜினியை விலை கொடுத்து வாங்கிவிட முடியாது: தமிழருவி மணியன்
Updated on
1 min read

எந்த நிலையிலும் ரஜினியை விலை கொடுத்து வாங்கிவிட முடியாது என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

இன்று (நவம்பர் 8) காலை சென்னையில் கமல் அலுவலகத்தில் நடைபெற்ற, மறைந்த இயக்குநர் பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் ரஜினி. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பியவுடன், தன் வீட்டு வாசலிலிருந்த பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ரஜினி.

அப்போது "திருவள்ளுவர் மீதும், தன் மீதும் காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது. அவரும் சிக்கமாட்டார். நானும் சிக்கமாட்டேன். தமிழகத்தில் ஆளுமைக்கான வெற்றிடம் இருக்கிறது” என்று பேசினார் ரஜினி. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

ரஜினியின் இந்தக் கருத்துகளுக்குத் தமிழருவி மணியன் கூறியிருப்பதாவது:

எந்த நிலையிலும் பாஜகவின் பக்கமும் சென்றுவிட மாட்டார். காவி வண்ணத்தையும் தன் வண்ணமாக மாற்றிக் கொள்ள மாட்டார் என்பதை அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார். கடந்த 3 ஆண்டுகளாக ஒவ்வொரு ஊடகத்தின் வாயிலாகவும் இதைத் தான் சொல்லியிருக்கிறேன். வேண்டுமென்றே ரஜினியின் மீது காவிச் சாயத்தைப் பூசி அவரை ஒரு மதம் சார்ந்த மனிதராக மக்கள் முன்னால் நிறுத்தி, அவருக்கு இருக்கும் நற்பெயரைக் கெடுக்க வேண்டும் என்பதற்காகவே சிலர் தொடர்ந்து முனைந்து கொண்டிருக்கிறார்கள்.

சிலர் ஊடகங்களில் ரஜினிகாந்த்தை பாஜகவின் பி டீம் என்றும், பாஜக பக்கம் தான் சாய்வார் என்றும் சொல்லிச் சொல்லி மக்களிடம் திணித்துக் கொண்டிருக்கிறார்கள். தன்னை அவர் இந்தப் பேட்டியின் மூலம் முழுமையாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதைத் தவிரச் சொல்ல வேறொன்றுமில்லை. எந்த நிலையிலும் ரஜினிகாந்த்தை விலை கொடுத்து வாங்கிவிட முடியாது. மக்களுடைய நலனுக்காக அவர் அரசியலுக்கு வரவுள்ளார். அவர்களுக்கு எது நல்லதோ அதைச் சிந்தித்துச் செயல்படுத்துவார்.

இவ்வாறு தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in