

பாஜகவின் முகத்திரையைக் கிழித்திருக்கிறார் ரஜினி என்று திமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி தெரிவித்துள்ளார்.
இன்று (நவம்பர் 8) காலை சென்னையில் கமல் அலுவலகத்தில் நடைபெற்ற, மறைந்த இயக்குநர் பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் ரஜினி. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பியவுடன், தன் வீட்டு வாசலிலிருந்த பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ரஜினி.
அப்போது "திருவள்ளுவர் மீதும், தன் மீதும் காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது. அவரும் சிக்கமாட்டார். நானும் சிக்கமாட்டேன்” என்று பேசினார் ரஜினி. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக திமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி கூறுகையில், "ரஜினிகாந்த் மிகத் திறமையோடு பாஜகவின் முகத்திரையைக் கிழித்திருக்கிறார் என்பதுதான் இந்தப் பேட்டியின் மூலமாகத் தெரிகிறது. தமிழகத்தில் எப்படியாவது காலூன்றி விட வேண்டும் என்பதற்காக, என்ன முயற்சிகளை பாஜக எடுத்தாலும் அதை ஸ்டாலின் தடுத்து நிறுத்துவார்.
இதேபோல ரஜினியின் கூற்றும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது என்பதுதான் உண்மை. ரஜினி தெளிவாக எனக்கு காவி சாயம் பூச முடியாது என்கிறார். நான் பாஜக பக்கம் செல்ல மாட்டேன் என்ற பொருள் கொண்டதாக ரஜினியின் பேட்டியைப் பார்க்கிறேன்" என்று பொன்முடி தெரிவித்துள்ளார்.