

விபத்துக்குள்ளான இந்திய விமானப் படைக்குச் சொந்தமான டார்னியர் விமானத்தின் விமானிகள் மூவர் குடும்பத்துக்கும் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த ஜூன் 8-ம் தேதி மாயமான டார்னியர் விமானத்தின் பாகங்களும், அதனுடன் அதில் பயணித்த விமானிகளின் எலும்புக்கூட்டின் பகுதிகளும் கிடைத்தன என்ற செய்தி கிடைத்தது.
அந்த விபத்தில் துணிச்சல்மிகு இளம் அதிகாரிகள் மூன்று பேர் இறந்தது உறுதிப்பட்டது. அச்செய்தியால் வேதனையடைந்தேன்.
தமிழக கடலோர பகுதிகளின் பாதுகாப்புக்கும், மீனவர்கள் நலனை பாதுகாப்பதிலும் இந்திய கடலோர காவற்படை தமிழக அரசுக்கு பேருதவி செய்து வருகிறது.
இந்நிலையில், இந்தியக் கடலோர பாதுகாப்புப் படையினர் இளம் அதிகாரிகள் மூவர் இழப்புக்கு நான் வருந்துகிறேன்.
அவர்களது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.