Published : 08 Nov 2019 03:54 PM
Last Updated : 08 Nov 2019 03:54 PM

ரூ.25 கோடி மதிப்பீட்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டிடங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார் 

சென்னை

25 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டிடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த தொழிலாளர் அலுவலர் அலுவலக வளாகங்கள் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழ்நாட்டில் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து கல்வி பயில விரும்பும் மாணாக்கர்களின் ஆர்வத்தை நிறைவு செய்யவும், தொழில்திறன் பெற்ற மனித வளத்தை உருவாக்குவதற்காகவும், அரசின் சார்பில் தொழிற்பயிற்சி நிலையங்களை கூடுதலாக தொடங்கப்பட வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்களைத் தொடங்குதல், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம், சின்னசேலத்தில் 5 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், திண்டிவனத்தில் 4 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டிடங்கள் மற்றும் பயிற்சியாளர் விடுதிக் கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

நீலகிரி மாவட்டம், கூடலூரில் 2 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டிடம், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மின்பணியாள் மற்றும் பொருத்துநர் தொழிற் பிரிவுகளுக்கான வகுப்பறை மற்றும் பணிமனைக் கட்டிடங்கள், கடலூர் மாவட்டம், கடலூர் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள டெக்னீசியன் பவர் எலக்ட்ரானிக்ஸ் தொழிற் பிரிவிற்கான வகுப்பறை மற்றும் பணிமனைக் கட்டிடங்கள், திருச்சிராப்பள்ளி மாவட்டம், புள்ளம்பாடி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இயந்திர வேலையாள் தொழிற் பிரிவிற்கான வகுப்பறை மற்றும் பணிமனைக் கட்டிடங்கள் ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

மேலும், வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆப்ரேட்டர் அட்வான்ஸ்டு மெஷின் டூல்ஸ் தொழிற் பிரிவிற்கான வகுப்பறை மற்றும் பணிமனைக் கட்டிடங்கள், சேலம் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மெக்கானிக் ரெப்ரிஜிரேஷன் மற்றும் ஏசி மெக்கானிக் தொழிற் பிரிவிற்கான வகுப்பறை மற்றும் பணிமனைக் கட்டிடங்கள், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தின் சார்பில் வேலூர் மாவட்டம், வேலூர், மேல்மொணவூரில் 4 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், கோணத்தில் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், புதுக்கோட்டை மாவட்டம் - புதுக்கோட்டை, பழனியப்பா நகரில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் அலுவலர் அலுவலக வளாகங்கள் என மொத்தம் 25 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டிடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த தொழிலாளர் அலுவலர் அலுவலக வளாகங்கள் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில், தலைமைச் செயலாளர் க.சண்முகம், இ.ஆ.ப., தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர் முகமது நசிமுத்தின், இ.ஆ.ப., தொழிலாளர் நல ஆணையர் டாக்டர் ஆர். நந்தகோபால், இ.ஆ.ப., வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் (முழு கூடுதல் பொறுப்பு) மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் வி. விஷ்ணு, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x