

சென்னை
காவி சாயம் பூசிவிடுவார்கள் என முன்பே ரஜினியிடம் கூறியிருப்பதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இன்று (நவம்பர் 8) காலை சென்னையில் நடிகர் கமல்ஹாசன் அலுவலகத்தில் நடைபெற்ற மறைந்த இயக்குநர் பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் ரஜினி. இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, "எனக்குக் காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது. அது நடக்காது. பாஜக எனக்கு எவ்வித அழைப்பும் விடுக்கவில்லை" எனத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த திருமாவளவன், "ரஜினிகாந்த் தன் மீது காவி சாயம் பூசுவதற்கு முயற்சி நடக்கிறது என்பதை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். அவர் மனம் திறந்து பேசியிருப்பதைப் பாராட்டவும், வரவேற்கவும் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஏற்கெனவே நான் அவரிடம் இதே கோணத்தில் தான் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்றும், உங்கள் மீது காவி சாயம் பூசிவிடுவார்கள் என்றும் தோழமை அடிப்படையில் சுட்டிக்காட்டியிருந்தேன். இன்று, "என் மீது காவி சாயம் பூச முயற்சிக்கின்றனர். திருவள்ளுவர் மீது காவி சாயம் பூசியுள்ளனர். திருவள்ளுவரும் சிக்க மாட்டார். நானும் சிக்க மாட்டேன்” என நகைச்சுவையாகப் பேசினாலும் துணிச்சலாகப் பேசியிருக்கிறார். அவர் எச்சரிக்கையுடனும் விழிப்புடணும் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்" என திருமாவளவன் தெரிவித்தார்.
அப்போது திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கைக் கொண்டவர் என ரஜினி பேசியது குறித்த கேள்விக்குப் பதிலளித்த திருமாவளவன், "கடவுள் நம்பிக்கை உள்ளவர் எனச் சொல்லியிருந்தாலும் அவர் இந்து மதத்தைச் சார்ந்தவர் என்று சொல்லவில்லை என்பதுதான் அதில் கவனிக்க வேண்டியது. ஏனென்றால் திருவள்ளுவர் சமத்துவத்திற்காகக் குரல் கொடுத்தவர்.
பிறப்பின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு கருதக்கூடிய இந்துத்துவ கருத்து அல்லது சனாதனக் கருத்து திருவள்ளுவரிடம் இல்லை என்பதைத்தான் நாம் வலியுறுத்த விரும்புகிறோம். அந்த அடிப்படையில் தான் ரஜினியின் கருத்தும் அமைந்திருக்கிறது," என திருமாவளவன் தெரிவித்தார்.