

சென்னை
ஸ்டாலின் மிசாவில் கைதானதற்கான நோட்டீஸ் ஆதாரத்தைக் காண்பிக்காதது ஏன் என, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை என, அமைச்சர் பாண்டியராஜன் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து, அமைச்சர் பாண்டியராஜனை எதிர்த்து, திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், "கல்லிலும் முள்ளிலும் நடந்து கடும் பயணம் மேற்கொண்டு, சொல்லடி பட்டு துயரங்களைத் தாங்கி, தியாகம் செய்து அரசியலுக்கு வந்து, மக்கள் தரும் பதவிப் பொறுப்புகளை அடைந்தவர்களுக்குத்தான், தியாகத்தைப் புரிந்து கொள்ளும் அறிவும் பக்குவமும், கொச்சைப்படுத்தாத சிந்தனையும் வரும். ஆனால் பாண்டியராஜன், அந்த வகைப்பட்டவர் அல்ல என்பதை நான் சொல்லி யாரும் தெரிந்துகொள்ள வேண்டியது இல்லை. அவரது கட்சிக்காரர்களே முழுவதையும் அறிவார்கள்," என விமர்சித்திருந்தார்.
ஸ்டாலினின் விமர்சனத்துக்கு பதில் தெரிவிக்கும் வகையில் சென்னையில் இன்று (நவ.8) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், "ஸ்டாலினின் விமர்சனங்களுக்கு நாங்கள் பதில் அளிப்போம். கட்சி ரீதியாக அந்த பதில் இருக்கும். இன்னும் இரண்டு நாட்களில் அந்த பதில் கிடைக்கும். மிசா சமயத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்ட நோட்டீஸ் அவரிடம் இருக்கும். அதன் நகல்கள் ஆவணக் காப்பகத்திலும் நீதித்துறையிலும் இருக்கும். இதை நிச்சயமாக வெளியே காட்டுவோம்.
ஆனால், அதற்கு முன்பு அவரே காட்டியிருக்கலாம். நான் கேள்விதான் எழுப்பினேன். எந்தக் குற்றத்துக்காக அவர் கைது செய்யப்பட்டார் எனக் கேள்வி எழுப்பினேன்.
அவர் தியாகம் செய்ததாக கூறுவதில் முக்கியமானது, 23 வயதிலே சிறை சென்று அடி வாங்கியதுதான் என பலர் கூறுகின்றனர். அதில் சில கேள்விகள் எழுகின்றன. அதை நாங்கள் கூட எழுப்பவில்லை. திமுகவின் பொன்முடியிடம் ஒரு தொலைக்காட்சி ஊடகத்தில் இதுகுறித்து கேள்வி எழுப்புகின்றனர். எனக்கு இதுபற்றித் தெரியாது என அவர் பதிலளிக்கிறார். மிசா குறித்த ஷா கமிஷன் அறிக்கையில், ஸ்டாலின் பெயர் இல்லையே என்கிறபோது, எனக்கு இதுபற்றித் தெரியாது என, திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி கூறுகிறார்.
அந்தக் கருத்தின் அடிப்படையில் நான் சந்தேகத்தை முன்வைத்தேன். அதற்கு, அந்த நோட்டீஸைக் காண்பித்து, மிசாவில் தான் கைதானேன் என பதில் அளித்திருக்கலாம். அதைச் சொல்லாமல், இத்தனை ஆர்ப்பாட்டங்கள் செய்கின்றனர். தனிநபர் விமர்சனமாக இதனைப் பார்க்கின்றனர். அவர் என்னைப் பற்றி வைத்துள்ள விமர்சனங்களுக்கு கட்சி பதிலளிக்கும்," என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.