திருப்பத்தூர் அருகே மாணவர்களுக்கு அழுகிய முட்டை விநியோகம்: வட்டார வளர்ச்சி அலுவலர் விசாரணை
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு அழுகிய முட்டை விநியோகிக்கப்பட்டதாக பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் இலவச முட்டை வழங்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 119 சத்துணவு மையங்கள், 136 அங்கன்வாடி மையங்கள், 11 நகராட்சி பள்ளிகள், 24 நகராட்சி அங்கன்வாடி மையங்களில் மாணவ, மாணவிகளுக்கு இலவச முட்டை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தாதுவள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நேற்று பிற்பகல் உணவுடன் இலவச முட்டை வழங்கப்பட்டது. அந்த முட்டை அழுகிய நிலையில் இருப்பதை கண்டு பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், பள்ளியில் திரண்ட பெற்றோர் முட்டையை சாப்பிட வேண்டாம் எனக்கூறி மாணவர்களை தடுத்தனர்.
பின்னர் சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர்களிடம் கேட்டபோது, அவர்கள் அலட்சியமாக கூறியுள்ளனர். இதையடுத்து, தலைமை ஆசிரியரிடம் சென்று பெற்றோர் முறையிட்டனர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் நலங்கிள்ளி நேரில் சென்று விசாரணை நடத்தினார். பிறகு அழுகிய முட்டைகளை அப்புறப்படுத்தி, வேறு முட்டைகளை சமைத்து மாணவர்களுக்கு வழங்க உத்தரவிட்டார். இதுபோல மீண்டும் நடைபெறாமல், ஒப்பந்ததாரரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக பிடிஓ உறுதியளித்தார். இதையேற்று, பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
