

ஒய்.ஆண்டனி செல்வராஜ்
மதுரை
அடங்கல் சான்றில் வேளாண் சாகுபடி பரப்பு, உற்பத்தியை கணக்கீடு செய்வதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால், வேளாண் திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வேளாண் உற்பத்தி பாதிப்பு, விளைபொருள் விலை வீழ்ச்சி போன்ற பிரச்சி னைகளால் விவசாயிகள் பாதிக்கப் படுகின்றனர்.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை, வடகிழக்குப் பருவ மழை, தை பட்டம் ஆகிய மூன்று சீசன்களில் வேளாண் பயிர்கள், தோட்டக் கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. மக்கள்தொகை அடிப்படையில் இந்த பயிர்கள் சாகுபடி பரப்பையும், உற்பத்தியையும் அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் முடிவெடுக்கும். அதற்கு, ஒவ்வொரு கிராம அளவிலும் விஏஓக்கள் பராமரிக்கும் விவசாய அடங்கல் சான்றில் இடம் பெற்றுள்ள தகவல்கள் முக்கிய பங்களிக்கும். ஒரு சர்வே எண்ணில் எந்த பயிர்கள், எவ்வளவு பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது, அதன் மகசூல் என்ன? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அடங்கலில் தெரிந்துவிடும்.
கடந்த காலத்தில் விஏஓ-க்கள் நேரடியாக ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று ஒவ்வொரு சர்வே எண் சாகுபடி நிலத்தையும் பார்வையிட்டு அதில் விளையும் பயிர்கள், மகசூல் விவரங்களை பதிவிடுவார்கள்.
ஆனால், சமீப காலமாக அடங்கல் சான்று புள்ளி விவரங் களை விஏஓ-க்கள் சரியாக வழங்குவதில்லை என்று புகார் எழுந்துள்ளது.
தற்போது அடங்கல் சான்றில் சாகுபடி விவரங்களை, TN-eAdangal என்ற ஆப்-ஐ டவுன்லோடு செய்து அதிலேயே விவசாயிகள் பதிவு செய்துகொள்ளும் வசதி செய்ய ப்பட்டுள்ளது. இதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவது இல்லை.
இதனால், தவறான அடங்கல் சான்று புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு விவசாய சாகுபடி பரப்பு நிலங்கள், அதன் உற்பத்தியை மத்திய, மாநில அரசுகள் மதிப்பிட நேர்கிறது. அதனால், தேவைக்கு தகுந்தாற்போல் விவசாய உற் பத்தியைப் பெருக்க முடியவி ல்லை. இதன் காரணமாக விலை வீழச்சி, உணவு பற்றாக்குறை போன்றவை ஏற்படுகின்றன.
இது குறித்து வேளாண் அதிகா ரிகள் கூறியதாவது:
விவசாய உற்பத்தி தொடர்பான அடிப்படை ஆவணமான அடங்கல் சான்றை விஏஓக்கள் சேகரித்து வைப்பார்கள். அதை தாசில்தார், ஆர்.ஐ.க்கள் சரிபார்த்து மாவட்ட வருவாய் அலுவலர், ஆட்சியருக்கு அனுப்ப வேண்டும். ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் அதை சரி பார்த்து வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை இயக்குநர், செயலருக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் மூலம் மாநில அரசு, நடப்பாண்டு தேவைக்கு ஏற்ப பழங்கள், காய்கறிகள், நெல் உள்ளிட்ட அனைத்து பயிர்கள் சாகுபடியை திட்டமிடும்.
மத்திய, அரசும் இதே நடைமுறையைப் பின்பற்றும். தேசிய அளவிலான வேளாண் திட்டங்களும், இந்த அடங்கல் புள்ளிவிவரங்கள் அடிப்ப டையிலேயே நிறைவேற்றப்படுகி ன்றன. சமீப காலமாக அடங்கல் சான்று புள்ளி விவரங்கள் சரி யாக இல்லாததால் விளை பொருட்களுக்கு போதிய விலை கிடைக்காத நிலை உள்ளது என்று கூறினர்.
இது குறித்து விஏஓ-க்களிடம் கேட்டபோது, ‘‘நேரடி கள ஆய்வு மூலமே அடங்கல் சான்று புள்ளி விவரங்கள் பராமரிக்க ப்படுகின்றன. ஆனால், விஏஓக்கள் பற்றாக்குறை, ஆய்வுப் பணி உள்ளிட்டவற்றால் வேலைப்பளு அதிகமாக உள்ளது. இ-அடங்கல் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த அனைத்து விஏஓ-க்களுக்கும் இன்னும் கணினி, இணைய வசதி ஏற்படுத்தித் தரவில்லை என்று கூறினர்.