

என்.சன்னாசி
மதுரை
மதுரையில் சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றத் தடுப்புக்கு என நிர்வாக ரீதியாக வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரித்து காவல் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரை மாநகரில் 4 மகளிர் காவல் நிலையங்கள் உட்பட 22 காவல் நிலை யங்களில் 2,300-க்கும் மேற்பட்ட காவலர்கள் பணிபுரிகின்றனர். நிர்வாக வசதிக்காக தல்லாகுளம், அண்ணாநகர், கூடல்புதூர், அவனியாபுரம் உள்ளிட்ட காவல் நிலையங்களை இரண்டாகப் பிரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக திருப்பாலை, மாட்டுத்தாவணி பகுதியில் புதிய காவல் நிலையங்களை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. நகரில் குற்றப்பிரிவை விட, சட்டம், ஒழுங்கு பிரிவில் கூடுதல் போலீஸார் இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, வாகனத் தணிக்கை, பழைய குற்றவாளிகளைக் கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதில் அதிகாரிகளிடம் தொய்வு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. சட்டம், ஒழுங்கு போலீஸாரின் கெடுபிடி அதிகரித்தால்தான் வழிப்பறி, சங்கிலி பறிப்பு உள்ளிட்ட குற்றங்களை துரிதமாகத் தடுக்க முடியும் என அதிகாரிகள் கருதுகின்றனர்.
இது தொடர்பாக சமீபத்தில் அதி காரிகள் நிலையில் ஆலோசனை நடத்தப்பட்டது. சட்டம், ஒழுங்கு, குற்றப் பிரிவை கவனிக்கும் துணை ஆணை யர்கள், உதவி ஆணையர்களுக்கு இரண்டையும் இணைத்து பார்க்கும் அதிகாரத்தை வழங்கலாம் என விவா திக்கப்பட்டது. இதன்படி, காவல்துறை நிர்வாக வசதிக்காக மதுரை நகரை வைகை ஆற்றின் தெற்கு நகர் பகுதி, வடக்கு நகர் பகுதி என இரண்டாகப் பிரித்து நிர்வகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அறிக்கை ஒன்றும் தயா ரிக்கப்படுகிறது. சென்னை நகரில் குறிப்பிட்ட பகுதிகளில் இத்திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. மதுரையில் இத்திட்டம் முழு அளவில் செயல்பாட்டுக்கு வந்தால் குற்றச் செயல்களை தடுக்க முடியும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், நகரில் எந்த குற்றச் செயலாக இருந்தாலும், இரு பிரிவு போலீஸாரும் இணைந்தே நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரில் உள்ள சில காவல் நிலையங்களில் சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றச் சம்பவங்களைப் பிரித்து பார்க்கும் சூழல் உள்ளது. வழக்கு விவரங்களை தனித்தனியே பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தாலும், புகார்தாரர்களைக் கையாளுவதில் பாரபட்சம் இருக்கக் கூடாது என்பதைத் தவிர்க்க, நிர்வாக ரீதியாக மதுரை நகரை இரண்டாகப் பிரித்து நிர்வகிக்கலாம் என்ற யோசனை உள்ளது. இதுபற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இதை டிஜிபியிடம் அனுப்பி ஒப்புதல் பெற்ற பிறகு இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்றார்.