Published : 08 Nov 2019 09:57 AM
Last Updated : 08 Nov 2019 09:57 AM

கல்வராயன்மலையில் இருந்து கடத்தல்: திட்டக்குடியில் தடையின்றி பாக்கெட் சாராயம் விற்பனை

திட்டக்குடி அடுத்த கொரைக்கைவாடி கிராம பிள்ளையார் கோயில் பின்புறம் குப்பைமேடாக காணப்படும் சாராய பாக்கெட்டுக்கள்

ந.முருகவேல்

விருத்தாசலம்

திட்டக்குடியில் தடையின்றி பாக்கெட் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் எல்லைப் பகுதிகளாக விளங்கும் திட்டக்குடி மற்றும் ராமநத்தம் பகுதியில் புதுச்சேரி வகை பாக்கெட் சாரயமும், டாஸ்மாக் திறப்பதற்கு முன்னரே மதுபாட்டில் விற்பனையும் நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். திட்டக்குடி அடுத்த கொரைக்கைவாடி கிராமத்தில் பிள்ளையார்கோயில் பின்புறம் அதிகாலையிலேயே 250 மில்லி லிட்டர் கொண்ட பாக்கெட் சாராயம் ரூ.60-க்கும் விற்கப்படுகிறது.காலையில் கோயிலுக்குச் செல்ல பெண்கள் அச்சப்படுகின்றனர். சிறுவர்களும் பாக்கெட் சாராயத்திற்கு அடிமையாவது வேதனையாக உள்ளதாக ராமநத்தத்தைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலர் ஜெகநாதன் தெரிவித்தார்.

பாலித்தீன் பைகளுக்கு அரசு தடைவிதித்துள்ளது. பாக்கெட் சாராயத்தை அடைத்து விற்க மட்டும் பாலித்தீன் பைகள் எங்கிருந்து கிடைக்கின்றன எனத் தெரியவில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள். இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் விற்பனையாளர்களிடம் கேட்டபோது," இப்பகுதியில் 6 இடங்களில் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. ஆனால் மாவட்டத்திலேயே குறைந்த அளவில் மது விற்பனை ஆவது எங்கள் பகுதியில் தான். கடந்த சில மாதங்களுக்கு முன் இதே பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர், ‘போன் செய்தால் போதும், மது உங்கள் வீடு தேடி வரும்' என்ற விளம்பரத்தோடு மது விற்பனை செய்துவந்தார். இதையடுத்து மது விலக்குப் போலீஸார் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தற்போது கல்வராயன்மலையிலிருந்து இறக்குமதி செய்யப் பட்டு, திட்டக்குடியில் அவை பாக்கெட் செய்யப்பட்டு, கள்ளத்தனமாக விற்பனை செய்துவருகின்றனர். மதுவிலக்கு அமல்பிரிவினர் அதைக் கண்டும் காணாமல் உள்ளது கவலை அளிக்கிறது" என்று தெரிவித்தனர்.

இது தொடர்பாக கடலூர் மாவட்ட மது விலக்கு அமல் பிரிவு டிஎஸ்பி தரனிடம் கேட்டபோது, "தகவல் அடிப்படையில் கள்ளத் தனமாக மது விற்பனை செய்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.அந்த வகையில் ஜெகதீசன் என்பவரை பிடித்து குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளோம். மாவட்டத்தில் கள்ளத்தனமாக நடைபெறும் மது விற்பனையை பெருமளவு தடுத்துள்ளோம். தற்போது திட்டக்குடி ராமநத்தம் பகுதியிலும் ஆய்வு நடத்தி, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x