திருப்பூர் மாவட்ட அரசு தலைமை சித்த மருத்துவமனையில் போதிய பணியாளர்கள் இன்றி நோயாளிகள் அவதி: பல ஆண்டுகள் அவலத்துக்கு எப்போது தீர்வு?

திருப்பூர் மாவட்ட அரசு தலைமை சித்த மருத்துவமனையின் நுழைவுவாயில் அருகே தேங்கி நிற்கும் மழைநீர்.
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை சித்த மருத்துவமனையின் நுழைவுவாயில் அருகே தேங்கி நிற்கும் மழைநீர்.
Updated on
2 min read

இரா.கார்த்திகேயன்

திருப்பூர் 

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ளது மாவட்ட அரசு தலைமை சித்த மருத்துவமனை. இந்த மருத்துவமனை வளாகத்தில் சித்த, ஆயுர்வேதம், ஓமியோபதி மருத்துவமனை உள்ளது. தினமும் காலை, மாலை நேரங்களில் 600-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். காலை 7.30 முதல் பகல் 12 மணி வரையும், மாலை 3 முதல் 5 மணி வரையும் மருத்துவமனை செயல்படுகிறது. ஆனால், பல ஆண்டுகளாக போதிய பணியாளர்கள் இன்றி நோயாளிகள் அவதிப்படும் சூழல் தொடர்வதாக, மாநகர மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அசுத்தமான வளாகம்

இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சே.பாலசுப்பிரமணியம் கூறும்போது, ‘மாவட்ட அரசு தலைமை சித்த மருத்துவமனையில் இருபாலருக்கும் 25 படுக்கை வசதிகள் உள்ளன. போதிய துப்புரவுப் பணியாளர்கள், மருத்துவமனை பணியாளர்கள், இரவுக் காவலர் இல்லாத நிலை, பல ஆண்டுகளாக தொடர்கிறது. மருத்துவமனை வளாகம், எப்போதும் அசுத்தமாகவே காணப் படுகிறது. இதனால், உள்நோயாளி கள் பலரும் பழைய பேருந்து நிலையத்திலுள்ள கட்டண கழிப்பறைக்கு செல்கின்றனர். ஆண், பெண் துப்புரவுப் பணியாளர் கள் இருவர் இருந்தால், கழிவறை மற்றும் வளாகம் உட்பட அனைத்தை யும் முழுமையாக பராமரிக்கலாம்.

சோலார் ஹீட்டர் இல்லை

பக்கவாதத்தால் பாதிக்கப் பட்டவர்கள் உள்நோயாளிகளாக வந்து சிகிச்சை எடுத்துச் செல்கின்ற னர். பெண் தெரபிஸ்ட் இல்லாத தால், ஆண்களே பெண்களுக் கும் சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்படுகிறது. வாத நோய், மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர் களுக்கு சுடு தண்ணீரில் சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால், சோலார் ஹீட்டர் வசதி இல்லாததால், முழுமையாக சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. சித்த மருத்துவத் துக்கு நோயாளிகள் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவதால், கூடுதலாக ஒரு மருத்துவரை நியமித்தால் அனைவரும் பயன்பெறுவர்.

மருந்தாளுநர் இல்லை

ஓமியோபதி, சித்தப் பிரிவுக்கு உள்ளதுபோல், ஆயுர்வேதப் பிரிவுக்கு மருந்தாளுநர் இல்லை. நோயாளிகள் சிரமப்படுவதால், மருந்தாளுநரை நியமிக்க வேண்டும். மருந்துகள் விநியோகிக் கும் பணியை, சில நேரங்களில் மருத்துவமனை பணியாளர்களே பார்க்கின்றனர்' என்றார்.

நுழைவுவாயிலில் மழைநீர்

நோயாளிகள் கூறும்போது, 'மழைக்காலங்களின்போது, மருத்துவமனை நுழைவுவாயில் பகுதியில் குளம்போல் தண்ணீர் தேங்குகிறது. குழந்தைகள் மற்றும் முதியவர்களை அழைத்து வருபவர்கள், மருத்துவ மனைக்குள் செல்வதற்குள் பெரிதும் சிரமப்பட வேண்டி உள்ளது. தண்ணீர் தேங்காத அளவுக்கு, மழைநீர் வடிகால் வசதியை மாநகராட்சி ஏற்படுத்தித் தர வேண்டும்' என்றனர்.

திருப்பூர் மாவட்ட சித்த மருத்துவப் பிரிவு அலுவலர் சி.தனம் கூறும்போது,'சோலார் ஹீட்டர் வசதி இல்லை. பெண் பிசியோ தெரபிஸ்ட் இல்லை. ஓமியோபதி பிரிவுக்கு மருந்தாளுநர், மருத்துவமனைக்கு துப்புரவுப் பணியாளர் உட்பட மருத்துவமனை காலியிடம் குறித்து, அரசுக்கு கடிதம் எழுதி உள்ளோம். இரவுக் காவலரை நியமிக்க மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக ஏற்பாடு செய்து வருகிறோம்' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in