Published : 08 Nov 2019 09:35 AM
Last Updated : 08 Nov 2019 09:35 AM

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் திறந்தவெளியில் மருத்துவக் கழிவுகள்: தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிணவறை அருகே கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள்.

திருவாரூர்

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட மருத்து வப் பொருட்களின் கழிவுகள், மருத்துவமனை வளாகத்துக் குள்ளேயே திறந்தவெளியில் கொட்டப்படுவதால், அப்பகுதிக்குச் செல்லும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பாதிக்கும் அபா யம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருவாரூரில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் திருவாரூர் மட்டுமின்றி நாகை மாவட்டத்தில் இருந்தும் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளி களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும், 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக தங்கி, மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த நோயாளி களுக்காகப் பயன்படுத்தப்படும் சிரிஞ்ச், ஊசி, சலைன் பாட்டில்கள், மருந்து பாட்டில்கள் மற்றும் மருத்துவத்துக்காக வாங்கி வரப்பட்டு, பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அனைத்தும், மருத்துவக் கல்லூரியின் பிண வறைக்கு அருகே உள்ள திறந்தவெளியில் குப்பையாக கொட்டப்பட்டு, ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. இதனால், பிணவறை பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுவதாகவும், அப்பகுதிக்கு செல்வோருக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப் பிருப்பதாகவும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் விஜயகுமார் கூறியதாவது: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட மருத்துவக் கழிவுகள், தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவக் கழிவு மேலாண்மை கிடங்குக்கு(பயோமெட்ரிக் வேஸ்ட் மேனேஜ்மென்ட்) தினமும் எடுத்துச் செல்லப்படுகின்றன. அதுவரை, இந்தக் குப்பையைப் பத்திரப்படுத்தி வைப்பதற்கு சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு உரிய வழிகாட்டுதல் செய்துள்ளோம். தற்போது, கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இதை முறையாக அப்புறப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை சம்பந்தப்பட்ட ஊழியர்கள் உணராமல் இருப்பதுதான் தற்போதைய நிலைக்குக் காரணம். ஊழியர்கள் ஏதாவது ஒரு தொழிற்சங்கத்தில் இருப்பதால், அவர்களை வழிநடத்த வேண்டிய மருத்துவ அலுவலர்கள், சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் வேலை வாங்குவதற்கு தயங்குகின்றனர். எனவே, தொழிற்சங்கங்களும் இதுபோன்ற நிலைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்குத் தக்க அறிவுரையையும், விழிப்புணர் வையும் வழங்க முன்வர வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x