

சென்னை
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அரசு முறை பயணமாக இன்று அதிகாலை அமெரிக்கா செல்கிறார். இதையொட்டி அவருக்கு முதல்வர் பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் பழனிசாமியின் கடந்த செப்டம்பரில் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். அவரைத் தொடர்ந்து, தொழில் முதலீடுகளை ஈர்ப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமெரிக்காவில் 10 நாள் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர், இன்று அதிகாலை சென்னையில் இருந்து புறப்பட்டு அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு செல்கிறார். சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பில் நாளை நடக்கும் குழந்தைகள் தின விழாவில் பங்கேற்கிறார். 10-ம் தேதி அவருக்கு ‘சர்வதேச வளர்ந்து வரும் தலைவர்’ என்ற விருது வழங்கப்படுகிறது.
இந்தப் பயணத்தின்போது, தமிழகத்தின் புதிய திட்டங்களுக்கு தேவையான நிதி குறித்து உலக வங்கியின் தெற்காசிய பிரிவு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தொழில் முதலீடுகள் திரட்டுவது குறித்து சிகாகோ, வாஷிங்டன், ஹூஸ்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் உள்ள முதலீட்டாளர்களை சந்திக்கிறார். அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு வரும் 17-ம் தேதி தமிழகம் திரும்புகிறார்.
அமெரிக்கா செல்வதையொட்டி நேற்று காலை தலைமைச்செயலகத்தில் முதல்வர்.பழனிசாமியை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து பெற்றார். முதல்வர் பழனிசாமி, நேற்று மாலை ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்குச் சென்று அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
சமக தலைவர் சரத்குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் ஆகியோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.