

ஜோலார்பேட்டை
ஏலகிரி மலையில் இருந்து ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட தொழிலதிபர் நேற்று பெங்களூரு அருகே பங்காருப்பேட்டையில் விடுவிக்கப்பட்டார். இதுதொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலை அத்தனாவூர் பகுதியைச் சேர்ந்தவர் அருள்(51). தொழிலதிபர். இவரை, நேற்று முன்தினம் காலை மர்ம நபர்கள் காரில் கடத்திச்சென்றனர். இதையடுத்து, ரூ.50 லட்சம் கொடுத்தால், அருளைவிடுவிப்பதாக அவரது மகன் ராபினுக்கு மர்ம நபர்கள் தொலைபேசி வாயிலாக தெரிவித்தனர்.
இதையடுத்து, திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேலு தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் தீவிரதேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்கிடையே, போலீஸார் தேடுதலை துரிதப்படுத்தியதை அறிந்தகடத்தல் கும்பல், அருளை கர்நாடகமாநிலம் பங்காருபேட்டைக்கு கடத்திச் சென்று அங்குவிடுவித்தனர். இதையடுத்து, அருள் நேற்று வீடு திரும்பினார்.
அருள் வீட்டுக்கு வந்துவிட்டதகவல் ஆந்திராவில் முகாமிட்டிருந்த தனிப்படை போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர், ஏலகிரி மலைக்கு வந்த தனிப்படைபோலீஸார் அருளை விசாரணைக்காக ஏலகிரி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அப்போது, வாணியம்பாடியைச் சேர்ந்த சபீர் அகமது (39), நசீர்அகமது (32), பெங்களூருவைச் சேர்ந்த பிரபு (26), வினோத் (32)ஆகிய 4 பேர் தம்மை கடத்திச்சென்றதாக அருள் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஜோலார்பேட்டை பகுதியில் தங்கியிருந்த 4 பேரையும் தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
கைதான 4 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், தொழிலதிபர் அருளுக்கும், அவரது கூட்டாளிகள் சிலருக்கும் இடையே பணம், கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக தகராறு இருந்து வந்ததும், அவர்களில் ஒருவர் கூறியதால், அருளை கடத்தி பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்ததாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.