Published : 08 Nov 2019 09:04 AM
Last Updated : 08 Nov 2019 09:04 AM

தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலைக்கு இரும்பு தடுப்பு அமைத்து போலீஸ் பாதுகாப்பு

தஞ்சாவூர்

தஞ்சாவூரை அடுத்த பிள்ளையார்பட்டியில் மர்ம நபர்களால் அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை உள்ள இடத்துக்கு அத்துமீறி யாரும்செல்ல முடியாதபடி இரும்பு தடுப்புகளை ஏற்படுத்தி போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுஉள்ளனர்.

பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை, கடந்த 3-ம் தேதி நள்ளிரவு மர்ம நபர்களால் அவமதிப்பு செய்யப்பட்டது. இதைஅடுத்து, அங்கு பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து, தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி, இச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை கைது செய்யநடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில், மர்ம நபர்களை உடனே கைது செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இங்குள்ள திருவள்ளுவர் சிலைக்கு கடந்த 5-ம் தேதி பாஜகவினர் பாலாபிஷேகம் செய்ததும், நேற்று முன்தினம்(நவ.6) இந்து மக்கள் கட்சியினர் ருத்ராட்ச மாலை, காவித்துண்டு அணிவித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து, பிள்ளையார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் வாசுதேவன் கொடுத்த புகாரின்பேரில், இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட 3 பேரை நேற்று முன்தினம் கைது செய்து, அன்றிரவு விடுவித்தனர்.

இதையடுத்து, வெளியூர்களைச் சேர்ந்த வேறு யாரும் பிள்ளையார்பட்டிக்கு வர முடியாமல் தடுக்கும் விதமாகவும், பாதுகாப்புக்கெனவும் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் நேற்று குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை உள்ள பகுதிக்கு யாரும் செல்லமுடியாத வகையில், அங்கு போலீஸார் இரும்புத் தடுப்புகளை அமைத்துள்ளனர். பிள்ளையார்பட்டியின் கடைவீதியிலும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட வெளி நபர்கள் யாரையும் போலீஸார் நேற்று அனுமதிக்கவில்லை.

இதற்கிடையில், நேற்று காலை தஞ்சாவூர் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் திருவள்ளுவர் சிலை இருக்கும் இடத்தைப் பார்வையிட்டு, அங்குநிரந்தர தடுப்புகள் ஏற்படுத்தவும்,சிலையைப் பாதுகாக்க இரும்பு கிரில் கேட் அமைக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

வட்டாட்சியர் விளக்கம்இதுகுறித்து தஞ்சாவூர் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் கூறியபோது, “பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலையை வருங்காலத்தில் யாரும் அவமதிக்கும் செயலில் ஈடுபடாமல் தடுக்கும் விதமாக சிலைக்கு மேற்கூரையும், சிலையைச் சுற்றிலும் இரும்பு கிரில் கேட் அமைக்கப்பட உள்ளது. கேட் அமைக்கப்பட்டவுடன் பாதுகாப்பாக பூட்டு போட்டு, பூட்டி வைக்கப்பட உள்ளது.

நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்போது, சிலைக்கு மாலை அணிவிக்க திறந்துவிடப்படும். மற்ற நாட்களில் சிலை பாதுகாப்பாக பூட்டியே வைக்கப்படும். இதன்சாவி, சிலையை நிறுவிய அந்த தெருவைச் சேர்ந்த பொதுமக்களிடம் ஒப்படைக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x