

சென்னை
தமிழகத்தில் 7 தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்துக்கு முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் பழனிசாமி சமீபத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது 40-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.8ஆயிரம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதுதவிர, சென்னையில் கடந்த ஜனவரியில் நடந்த 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.
இதில், ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனங்களுக்கு சலுகைகள், நிலம் ஒதுக்கீடு மற்றும் அனுமதி வழங்குவது குறித்து அமைச்சரவை கூடி முடிவெடுக்க வேண்டும். இதுதொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது.
பிற்பகல் 12.32மணிக்கு தொடங்கிய கூட்டம். 1.50மணி வரை நடந்தது. இதில், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், தலைமைச் செயலர் சண்முகம், நிதித்துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
குறிப்பாக, தொழில் துறையின் கீழ் 7 தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சில புதிய தொழில் திட்டங்கள் குறித்தும், புதியதாக தொழில் தொடங்க வரும் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் சலுகைகள் அளிப்பது, புதிய முதலீட்டுக்கான அமைவிடங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய வணிகவரி நிலுவைத் தொகையை வசூலிப்பது தொடர்பாகவும் முடிவுகள் எடுக்கப்பட் டுள்ளன.
மேலும் உள்ளாட்சித் தேர்தலில் மேயர், உள்ளாட்சிகளின் தலைவர்கள் பொறுப்புகளுக்கு மறைமுகமாக தேர்வு செய்வது குறித்தும், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளபடி உடனடியாக தேர்தலை நடத்துவதில் இருக்கும் நடைமுறை சிக்கல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆளுநரிடம் அறிக்கை தயாரித்து வழங்கவும் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.