ஜேப்பியார் கல்வி குழுமங்களில் வருமானவரி துறை சோதனை: 30-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து நடைபெறுகிறது

ஜேப்பியார் கல்வி குழுமங்களில் வருமானவரி துறை சோதனை: 30-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து நடைபெறுகிறது
Updated on
2 min read

சென்னை

ஜேப்பியார் கல்விக் குழுமம் தொடர்புடைய 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஜே.பங்குராஜ் என்ற ஜேப்பியார்,1988-ம் ஆண்டு கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார். அந்த அறக்கட்டளையின்கீழ் தற்போது 15 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஜேப்பியார் மாமல்லன் பொறியியல் கல்லூரி, சத்யபாமா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, புனித மேரி மேலாண்மை கல்வி நிறுவனம், பனிமலர் பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஜேப்பியார் கல்விக் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

வரி ஏய்ப்பு புகார்

இந்நிலையில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக, பூந்தமல்லி, சூளைமேடு, பழைய மாமல்லபுரம் சாலை, சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி உள்ளிட்ட ஜேப்பியார் கல்வி நிறுவனங்கள் தொடர்புடைய 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று காலையில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் 100-க்கும்அதிகமான அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

சூளைமேடு ரயில்வே காலனியில் உள்ள பனிமலர் பாலிடெக் னிக் மற்றும் பொறியியல் கல்லூரியில் சோதனையிட வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று சென்றபோது, அங்கு மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டு இருந்தனர். இதனால், மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு சோதனை நடைபெற்றது. தேர்வு முடிந்த பிறகு மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு முழுவீச்சில் சோதனை தொடர்ந்தது.

ஜேப்பியார் கல்வி குழுமங்களில் நடைபெற்று வரும் இச் சோதனை 2 அல்லது 3 நாட்கள் தொடரக் கூடும் என்று வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முட்டம் துறைமுகம்

இதேபோன்று, கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில் உள்ள ஜேப்பியார் மீன்பிடி துறைமுகம், மூங்கில்விளையில் உள்ள ஜேப்பியார் மருத்துவமனை போன்றவற்றிலும் வருமானவரித் துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

ஊழியர்கள் எதிர்ப்பு

ஜேப்பியார் மீன்பிடி துறைமுகத்துக்கு வருமான வரித் துறையைச் சேர்ந்த 6 அதிகாரிகள் சென்றபோது, துறைமுக ஊழியர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். மீன்பிடி துறைமுக நுழைவு வாயில் மற்றும் உட்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதனால் முட்டம் துறைமுக பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in