

திருச்சி
திருச்சி லலிதா ஜுவல்லரி நகை திருட்டு வழக்கில் தொடர்புடைய இருவரை குண்டர் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜ் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள லலிதா ஜுவல்லரியில் ரூ.13 கோடி மதிப்பிலான தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகள் அக்.2-ம் தேதி திருடப்பட்டன.
இதுகுறித்து கோட்டை காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் திருவாரூர் மடப்புரம் முக்தி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த இளங்கோவன் மகன் மணிகண்டன்(34) மற்றும் திருவாரூர் பேபி டாக்கீஸ் சாலை சீராத்தோப்பு பகுதியைச் சேர்ந்த பன்னீர் செல்வம் மனைவி கனகவல்லி(57) ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 4.750 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் தற்போது நீதிமன்றக் காவலில் திருச்சி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க மாநகர ஆணையர் அ.அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியான திருவாரூர் முருகன், சுரேஷ், கணேசன் உள்ளிட்டோர் நீதிமன்றக் காவலில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.