

சென்னை
உள்ளாட்சித் தேர்தலை நடத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தயார் நிலையில் இருக்க வேண் டும் என்று மாநில தேர்தல் ஆணை யர் இரா.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் நீதிமன்ற வழக்கு காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அனைத்து உள்ளாட்சிகளுக்கும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிர்வாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் உள்ளாட்சித் தேர்தலுக்கு ஏற்ற வகையில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரித்து அண்மையில் வெளியிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் கடந்த மாதம் 31-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் ஆயத்தப் பணிகள் குறித்த 2-ம் கட்ட ஆய்வுக் கூட்டம் சென்னை பெசன்ட் நகரில் உள்ள ராஜாஜி பவனில் நேற்று நடைபெற்றது. இதில் மாநில தேர்தல் ஆணையர் இரா.பழனிசாமி கலந்துகொண்டு, மாவட்ட வாரியாக ஆலோசனை நடத்தினார்.
இக் கூட்டத்தில், வாக்குப் பதிவு இயந்திரங்களில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட பரிசோதனை விவரம், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனத்தின் நிலை, அவர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி, வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் அங்குள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வுதள வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இவை தொடர்பாக அந்தந்த மாவட்டங்களின் நிலை குறித்து மாவட்ட ஆட்சியர்கள் விளக்கினர்.
பணிகளை முடிக்காத மாவட்டங்களில் விரைந்து பணிகளை முடிக்குமாறு அறிவுறுத்தினார். அதைத் தொடர்ந்து, ‘‘உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வந்தால், தேர்தலை நடத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்" என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவுறுத்தியதாக உள்ளாட்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.