Published : 08 Nov 2019 08:22 AM
Last Updated : 08 Nov 2019 08:22 AM

நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தை தடுக்க மருத்துவ சேர்க்கையின்போதும் மாணவர்களின் பெருவிரல் ரேகை பதிவை பெற நீதிபதிகள் அறிவுறுத்தல்

சென்னை

நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தை தடுக்கமருத்துவ சேர்க்கையின்போதும் கல்லூரிகளில் மாணவர்களின் பெருவிரல்ரேகை பதிவுகளைப் பெற வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதாக கோவையைச் சேர்ந்த தீரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள் என்.

கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு நீட்தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பாகவும் பல்வேறு கேள்விகளை எழுப்பி மத்திய, மாநில அரசுகள் மற்றும் சிபிஐ தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு இருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று இதே அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘24 மணிநேரமும் பணியில் உள்ள அரசு மருத்துவர்கள் மற்றும் போலீஸாரின் சம்பளம், கல்லூரி ஆசிரியர்களின் சம்பளத்தைவிட குறைவாக இருக்கிறது என்றுதான் ஏற்கெனவே தெரிவித்து இருந்தோம்.

ஏனெனில் கல்லூரி பேராசிரியர்களுக்கு யுஜிசி பரிந்துரைப்படி சம்பளம் வழங்கப்படுகிறது. அந்தளவுக்கு மருத்துவர்களுக்கு ஏன் வழங்கப்படுவதில்லை என்றுதான் கேள்வி எழுப்பியிருந்தோம்’’ என்றனர். அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் போத்திராஜ், ‘‘இதுவரை 16 மாணவர்கள் தங்களின் பெருவிரல் ரேகை பதிவுகளை சிபிசிஐடி போலீஸாரிடம் வழங்கவில்லை. அந்த பெருவிரல் ரேகைகள் நாளைக்குள் (இன்று) பெறப்பட்டு சிபிசிஐடி போலீஸார் வசம் ஒப்படைக்கப்படும். இந்த பெருவிரல் ரேகைப் பதிவுகளை ஒப்பிட்டுப் பார்க்க 90 நாட்களாகும்’’ என்றார்.

சிபிஐ தரப்பில் வழக்கறிஞர் கே.சீனிவாசன் ஆஜராகி, ‘‘நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக சென்னை மண்டலத்துக்கு தமிழகத்தில் இருந்து 2 புகார்களும், கேரளாவில் இருந்து ஒரு புகாரும் வந்துள்ளன. அதுகுறித்து பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கைக்காக மத்திய அரசுக்கும், மருத்துவ கவுன்சிலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

அப்போது, ‘‘சில தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் இதுவரை பெருவிரல் ரேகைகளை சிபிசிஐடி போலீஸாரிடம் அளிக்காதது ஏன்?’’ என நீதிபதிகள் கேள்விஎழுப்பினர். அதற்கு அந்த கல்வி நிறுவனங்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‘‘விரைவில் அந்த மாணவர்களின்பெருவிரல் ரேகை விவரங்கள் போலீஸாரிடம் அளிக்கப்படும்’’ என்றனர்.

அப்போது நீதிபதிகள், ‘‘ஆள்மாறாட்டத்தை தடுக்க மருத்துவ சேர்க்கையின்போதும் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் பெருவிரல் ரேகை பதிவுகளைப் பெற வேண்டும்’’ என தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.வேல்முருகன் ஆஜராகி, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது.

மதிப்பெண் குறைவாக பெற்றமாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது என குற்றம்சாட்டினார். அப்போது மருத்துவ கவுன்சில் தரப்பில், வருங்காலங்களில் இதுபோன்றகுளறுபடிகள் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், எனதெரிவிக்கப்பட்டது.

மேலும் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெயர்கள் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக பதிவேடுகளில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக தேர்வுக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் மருத்துவ பல்கலைக்கழக பதிவாளரையும் ஒரு எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு, வரும் நவ.21-ம் தேதிக்குள் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக தேர்வுக் குழு பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிய மாணவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x