

சென்னை
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது தொடர்பாக தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி ஆய்வு நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த மது என்பவர், உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: நாட்டில் 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கல்வி பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் வந்த பிறகு தொடக்கக் கல்வி மேம்பாடு தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அரசாணை பிறப்பித்தது.
அதில் 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அடிப்படைக்கல்வி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். குழந்தைகளின் வயதுக்கேற்ப வகுப்பில் சேர்த்து சிறப்புப் பயிற்சி அளித்து முந்தைய வகுப்புகளின் பாடங்களைக் கற்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதனால், தொடக்கக் கல்வியில்ஒரு பள்ளியிலிருந்து வேறு ஒரு பள்ளிக்கு மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாறுதலாக வாய்ப்புள்ளது. இதுபோன்ற நடைமுறைகளால் இலவசக் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி வழங்கப்படும். ஆனால், கல்வியில் எதிர்பார்த்த தரம் இல்லாமல் உள்ளது.
எனவே, தொடக்கக் கல்வி மேம்பாடு தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித் துறை 12.7.2010-ல்பிறப்பித்த அரசாணையை மறுசீராய்வு செய்யவும், இந்த அரசாணை அமலுக்கு வந்து கடந்த 9 ஆண்டுகளில் தொடக்கக் கல்வியில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும், தொடக்கக் கல்வியில் பள்ளி மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாணவர்களைச் சேர்க்கக் கூடாது என்றும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், ஆர்.தாரணி அமர்வில்நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வழக்கறிஞர் முத்துக்கிருஷ்ணன் வாதிடும்போது, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படியான நடைமுறைகளால் கல்வித்தரம் உயர்ந்ததாகத் தெரியவில்லை.
10-ம் வகுப்பு மாணவன் ஆங்கில எழுத்துகளைகூட அடையாளம் காண முடியாத நிலைதான் உள்ளது. இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதேபோல் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தால் அடுத்த 2 ஆண்டுகளில் 4,000 அரசுப் பள்ளிகளை மூட அரசு முடிவு செய்துள்ளது. எனவே, கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட நடைமுறைகளை மறுசீராய்வு செய்ய வேண்டும் என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், அரசுப் பள்ளிகளை மூடும் திட்டம் உள்ளதா என அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் பள்ளிகளை இணைக்க அரசு திட்டமிட்டுள்ளது என அரசு வழக்கறிஞர் பதிலளித்தார்.
பின்னர், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவது தொடர்பாக அரசு தனிக்கவனம் செலுத்தி ஆய்வு செய்ய வேண்டும். இந்த மனு தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர், பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ஆகியோர் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.