

சென்னை
கஜா புயல் பாதித்த மாவட்டங்களின் கடல் பகுதிகளில் ரூ.18 கோடி செலவில் செயற்கை பவளப் பாறைகளை அமைக்க மீன்வளத் துறை முடிவு செய்துள்ளது.
மீன்கள் மற்றும் கடலிலுள்ள இதர உயிரினங்களுக்கு வாழ்விட மாகவும், இனப்பெருக்க தளமாக வும் செயற்கை பவளப்பாறை விளங்கி வருகிறது. எனவே, கடலில் மீன்வளத்தை மேம் படுத்த தமிழகம் முழுவதும் கடல்பகுதிகளில் செயற்கை பவளப் பாறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இடம் தேர்வு
இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ரூ.10 கோடி செலவில் செயற்கை பவளப் பாறைகளை அமைக்க மீன்வளத் துறைமுடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பவளப் பாறைகளை அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களின் கடல்பகுதிகளில் ரூ.18 கோடியில் செயற்கை பவள பாறைகள்அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
60 இடங்களில்..
இதுதொடர்பாக, மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மீன்வளத்தை பெருக்கும் நோக்கில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் கடல் பகுதிகளில் ரூ.18 கோடியில், 60 இடங்களில் செயற்கை பவளப் பாறைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக மத்திய கடல் சார் ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
மத்திய கடல் சார் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் ஆய்வு செய்து பவளப் பாறைகள் அமைப்பதற்கு தகுதியான இடங்கள் கண்டறியப்படும். இடங்கள் கண்டறியப்பட்டவுடன் டெண்டர் கோரப்பட்டு பணிகள் தொடங்கி விரைந்து முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.