Published : 07 Nov 2019 05:13 PM
Last Updated : 07 Nov 2019 05:13 PM

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் ஆண்டிற்கு ரூ.2,000 கோடி மத்திய அரசு நிதியை இழக்கும் தமிழகம்: மதுரை மத்திய தொகுதி திமுக எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன் தகவல்

மதுரை

"உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் ஆண்டிற்கு மத்திய அரசு நிதி ரூ.2000 கோடியை தமிழகம் இழந்து வருகிறது" என்று மத்திய தொகுதி எம்.எல்.ஏ. பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை வீதிகளில் பேவர் பிளாக் கற்கள் அகற்றி கருங்கற்கள் பதிக்கின்ற பணியை இன்று காலை மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் செய்தியாளர்ளிடம் கூறியதாவது;

உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட்டால் மட்டுமே மத்திய அரசு வழங்குகின்ற நிதி தங்கு தடையின்றி கிடைக்கும். உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் ஆண்டிற்கு மத்திய அரசு நிதி 2000 கோடி ரூபாயை தமிழகம் இழந்து வருகிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கபப்ட்ட பிரநிதிகளின் கருத்துக்களைக் கேட்காமல் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் தொழில்நுட்ப ரீதியான குறைப்பாடுகளுடன் செயல்படுத்தப்படுகிறது.

பேவர் பிளாக் கற்களை அகற்றிவிட்டு 4 இன்ச் கருங்கற்களை பதித்து வருகின்றனர். இக்கற்கள் வெப்பத்தை உள்வாங்கி நடந்து செல்பவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். அதை சுட்டிக்காட்டினால் மேலே மேட் அமைப்போம் எனக் கூறுகிறார்கள்.

ஒரு பிரச்சினையை ஏற்படுத்தி அதனைத் தீர்க்க இப்படி ஒரு நடவடிக்கை அவசியம்தானா? இரண்டாவது முறையாக இந்தப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டிருக்கிறேன்.

பொது கணக்குக் குழு ஆய்வின்போதும் எனது கருத்துகளைத் தெரிவித்துள்ளேன்.

அகற்றப்பட்ட பேவர் பிளாக் கற்கள் மற்றும் அள்ளப்பட்ட மணல் மாநகராட்சியின் வேறு பணிகளுக்கு பயன்படுத்திட உள்ளதாக கூறுகின்றனர்.

இது எந்த அளவிற்கு சாத்தியம் எனத் தெரியவில்லை. பெரு நிதி முதலீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்போது அந்த நிதி இதற்கு அவசியம் தானா வேறு ஏதேனும் திட்டங்களுக்கு பயன்படுத்திடலாமா என்பது குறித்தெல்லாம் ஆய்வு நடத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x