Last Updated : 02 May, 2014 09:37 AM

 

Published : 02 May 2014 09:37 AM
Last Updated : 02 May 2014 09:37 AM

வாக்குரிமை கிடைத்தும் வாக்களிக்காத மாற்று பாலினத்தவர்கள்

தமிழ்நாடு முழுவதும் 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 341 மாற்று பாலினத் தவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் தேர்தல் ஆணைய புள்ளி விவரங்களின்படி 12.72 சதவீதத்தினர் (சுமார் 425 பேர்) மட்டுமே கடந்த ஏப்ரல் 24-ம் தேதி வாக்களித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் ஒன்றரை லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை மாற்று பாலினத்தவர் உள்ள னர் என பலரும் கூறி வரும் நிலை யில், வாக்காளர்கள் பட்டியலில் வெறும் 3 ஆயிரத்து 341 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

“மாற்று பாலினத்தவர் பற்றிய ஒரு முறையான கணக்கெடுப்பு இதுவரை இல்லாததே இதற்கு காரணம்” என்கிறார் மாற்று பாலினத்தவர் உரிமைகளுக்காக பணியாற்றி வரும் ‘மனிதத்தின் முழுமை கொணர்வோம்’ என்ற அமைப்பின் இயக்குநரான ஆல்கா.

அவர் மேலும் கூறும்போது, “மாற்று பாலினத்தவர்களாக தங் களை அடையாளம் கண்டு கொண்ட அனைவருமே அதனை வெளிப்படுத்திக் கொள்வது இல்லை. பல்வேறு காரணங்களால் 40 சதவீதத்தினர் தங்கள் அடை யாளத்தை மறைத்தே வாழ்கின்ற னர். இது தவிர, மாற்று பாலினத் தவரை அடையாளம் கண்டு கணக் கெடுப்பு பதிவேட்டில் சேர்ப்பது பற்றி கணக்கெடுப்புப் பணிக்குச் செல்லும் அலுவலர்களுக்கு எவ்வித பயிற்சியோ வழிகாட்டு தலோ இல்லை. இத்தகைய காரணங்களால் வாக்காளர் கணக் கெடுப்பு உள்பட எந்த கணக்கெடுப் பிலும் மாற்று பாலினத்தவர்கள் பற்றி முழுமையான விவரங்கள் சேகரிக்கப்படவில்லை” என்றார்.

அவரது இந்த கூற்றை மெய்ப்பிக் கும் விதமாக சிவகங்கை நாடாளு மன்றத் தொகுதியில் ஒரு மாற்று பாலின வாக்காளர் கூட இல்லை என்றும், மயிலாடுதுறையில் ஒருவர் மட்டுமே உள்ளதாகவும் தேர்தல் ஆணைய ஆவணங்களில் கூறப்பட் டுள்ளன.

இவ்வளவு தடைகளையும் தாண்டி வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்தும் கூட ஏராளமானோர் ஏன் வாக்களிக்க செல்லவில்லை என்ற கேள்வி எழுகிறது. குறிப் பாக 252 மாற்று பாலின வாக்காளர் களின் பெயர்கள் மத்திய சென்னை தொகுதியில் இடம்பெற்றிருந்தும், அவர்களில் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது பற்றி மாற்றுப் பாலினத் தவரும், அவர்களின் உரிமைகளுக் காகப் போராடி வருபவருமான பானு கூறும்போது, “வாக்காளர் கள் பட்டியலில் பெயர் இடம்பெற்றி ருந்தாலும், தேர்தல் ஆணையம் குறிப்பிடும் எந்த அடையாள அட்டையும் இல்லாத காரணத்தால் பல மாற்றுப் பாலினத்தவர்களால் வாக்களிக்க முடியவில்லை” என்றார்.

செயல்பாட்டாளர் ஆல்கா கூறும் போது “குடும்பத்தோடு இணைந்த வாழ்க்கை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்றவைதான் மாற்று பாலினத்தவரின் இன்றைய முதன்மையான தேவைகளும், உரிமைகளும் ஆகும். ஆனால் இந்த உரிமைகள் எதுவுமே கிடைக்க வில்லை என்றார்.

மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பிற நலிந்த பிரிவினரைப் போலவே மாற்று பாலினத்தவர்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக் கீட்டு உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்துள்ளது. நாட்டில் விரைவில் அமைய உள்ள புதிய அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமே யானால், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் மாற்று பாலினத்தவரின் பங்கேற்பு அதிகரிக்கும் என்பது நிச்சயம்.

மதுரையில்…

மாற்று பாலினத்தவரான பாரதி கண்ணம்மா, மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். அந்தத் தொகுதியில் மொத்தம் 53 மாற்று பாலின வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 49 சதவீதம் பேர் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x