Published : 07 Nov 2019 02:46 PM
Last Updated : 07 Nov 2019 02:46 PM

ஐடி துறையில் முதலீடுகளை ஈர்க்கும் சிறந்த மாநிலம் தமிழகம்: முதல்வர் பழனிசாமி பெருமிதம்

மாநாட்டை தொடங்கி வைக்கும் முதல்வர் பழனிசாமி

சென்னை

தகவல் தொழில்நுட்பவியல் சேவைகளுக்கான முதலீடுகளை ஈர்க்கும் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவ.7) இந்தியத் தொழில் கூட்டமைப்பும் தமிழக அரசும் இணைந்து நடத்திய கனெக்ட் 2019 மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசியதாவது:

"பல புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சென்னையில் தொடங்கப்பட்டு வருகின்றன. மிகப்பெரிய நிறுவனங்களும் தங்களுடைய கிளைகளை சென்னையில் திறந்துள்ளன. இதற்குக் காரணம் தமிழ்நாடு ஒரு அமைதியான மாநிலமாகவும், நவீன தொழில்நுட்பத் தேவைகளை நிறைவேற்றுகின்ற அளவுக்கு மனிதவள ஆற்றல் கொண்ட மாநிலமாகவும் விளங்குகிறது.

முழுவதும் கணினிமயமாக்கப்பட்ட அரசு சேவைகளை குடிமக்கள் அரசு இ-சேவை மையங்கள் மூலமாகவோ அல்லது தங்கள் மேசைக் கணினி அல்லது திறன்பேசி வாயிலாகவோ தமது இருப்பிடத்திலிருந்தே பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

2 மற்றும் 3 ஆம் நிலை பகுதிகளில் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு வியாபாரக் குறியீடாக 'எல்கோசெஸ்' என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரிட்டார். இவை, தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் அதைச் சார்ந்த சேவைகளுக்கான முதலீடுகளை ஈர்க்கும் ஒரு சிறந்த இடமாகத் திகழ்கிறது.

2018-19 ஆம் ஆண்டில் மென்பொருள் ஏற்றுமதி 1 லட்சத்து 22 ஆயிரத்து 899 கோடி ரூபாயாகும். இதனால் 6 லட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மென்பொருள் ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்பில் தமிழ்நாடு, இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

உயர்தர கேபிள் சேவைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 130 ரூபாயில் 200 சேனல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 26 லட்சத்து 36 ஆயிரத்து 820 சந்தாதாரர்களுக்கு செட்டாப் பாக்ஸ்கள் விலையின்றி வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் தற்போது 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. இம்மையங்கள் பல்வேறு துறைகளின் 120-க்கும் மேற்பட்ட சேவைகளை வழங்கி வருகின்றன. இதுவரை 4 கோடியே 81 லட்சம் மக்கள் இதன் மூலம் பயன் பெற்றுள்ளனர்.

அனைத்து கிராம ஊராட்சிகளும், பாரத்நெட் திட்டத்தை ரூபாய் 1,815 கோடி செலவில் தமிழ்நாட்டில் செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள 12,524 கிராம ஊராட்சிகளும், கண்ணாடி இழை கட்டமைப்பு மூலம் இணைக்கப்படும். இதன் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் 1 ஜிபிபிஎஸ் அளவுக்குக் குறையாமல் இணையதள வசதி வழங்கப்படும். இத்துடன் ரூபாய் 500 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசின் தமிழ்நெட் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து நகரப் பகுதிகளுக்கும் அதிவேக இணையதள வசதி விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டங்கள் அடுத்த 18 மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட உள்ளன’’.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x